ஆவடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை சபாநாயகர் அப்பாவு நாசர் எம்எல்ஏ துவக்கி வைத்தனர்

ஆவடி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளையை தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். ஆவடி, குளக்கரை தெருவில் புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளையை சபாநாயகர் அப்பாவு மற்றும் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் ஆகியோர் நேற்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர், ‘‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என ஐ.ஓ.பி., பொது மேலாளர் ரியாஸுல் ஹக்கிடம் கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘‘கடந்த 9 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் செலுத்தும் பணத்தில் தொழிலதிபர்களுக்கு கடன் வழங்குகின்றனர். தங்களுக்கு ஆதரவானவர்கள் ஆட்சியில் இருந்தால், அந்த கடன்கள் ரத்து செய்யப்படுகிறது. தமிழக அரசுக்கு ஆளுநர் நெருக்கடி தர முடியாது, அவருக்கு ஒரு எல்லை உள்ளது. தமிழக அரசுக்கு ஆளுநர் நெருக்கடி தரும் போக்கை நிறுத்திக் கொண்டால் அவருக்கு நல்லது.

மேலும், செந்தில்பாலாஜி தானாக பதவியை ராஜினாமா செய்வதாக கூறினால்தான், முதலமைச்சர், நீங்கள் விலகி கொள்ளுங்கள் வேறு ஒருவரை அமைச்சராக்குகிறேன் என முதல்வர் கூற முடியும். அதை தவிர்த்து, யாராலும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முடியாது. வழக்கு இருக்கும், கைது இருக்கும், நீதிமன்ற காவல் இருக்கும். இதனால் பதவி இழக்க அவசியம் இல்லை. முதல்வர் கோழையல்ல, வீரமானவர், விவேகமானவர் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை. திராவிட தலைவர்கள் பற்றி விஜய் பேச மறந்திருப்பார், அதை அவரிடம் கேளுங்கள்.

செந்தில்பாலாஜி கைது நாடாளுமன்ற தேர்தலில் அனுதாபத்தைதான் ஏற்படுத்தும். கொங்கு மண்டலமே கொதித்து போய் உள்ளது.’’ என்றார். இந்நிகழ்ச்சியில், ஆவடி மேயர் ஜி.உதயகுமார், மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன்பிரகாஷ், பகுதி செயலாளர்கள் பேபி சேகர், நாராயண பிரசாத், பொன் விஜயன், ஜி.ராஜேந்திரன் மற்றும் வங்கி அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்