அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. விண்ணப்பிக்காதவர்கள் இன்று மாலை 5மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கல்லூரி சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 94.03 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, கடந்த 8ம் தேதியில் இருந்து 3 வாரமாக கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 19ம் தேதி இந்த விண்ணப்பம் நிறைவு அடைவதாக இருந்தது. ஆனால் மாணவர்கள் நலன் கருதி மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். tngasa.in என்ற இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுவரை 2.37 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இனி ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய விரும்பினால் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்களில் 2 லட்சம் பேர் வரை கட்டணம் செலுத்தி உள்ளதாகவும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு முடிந்ததும், மாணவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு வரும் 23ம்தேதி அனுப்பி வைக்கப்படும். அதை தொடர்ந்து 25ம்தேதி முதல் 29ம்தேதி வரையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது. பின்னர் 30ம்தேதி முதல் அடுத்த மாதம் 9ம்தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், அடுத்த மாதம் 12ம்தேதி முதல் 20ம்தேதி வரை 2ம் கட்ட பொது கலந்தாய்வும் நடத்தப்பட இருக்கிறது. கலந்தாய்வு முடிந்ததும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் 22ம்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பி.காம் பிரிவுக்கு டிமாண்ட்

இந்த கல்வியாண்டில் பி.காம் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள 40 இடங்களில் சேர்வதற்கு 6,200 மாணவர்களும், ராணிமேரிக் கல்லூரியில் உள்ள 60 இடங்களில் சேர்வதற்கு 4,500 மாணவிகளும், பி.காம் சி.ஏ., படிப்பில் சேர்வதற்கு கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 60 இடங்களுக்கு 3,400 மாணவர்களும், வியாசர்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்வதற்கு 70 இடங்களுக்கு 3,478 பேரும், பாரதி பெண்கள் கல்லூரியில் உள்ள 140 இடங்களுக்கு 3,421 பேரும் விண்ணப்பம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவில் 40 சதவீத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது