அண்ணாமலை தூய்மையானவர் என பேசக்கூடாது பாரதிய ஜனதாவில் மோடியை தவிர யாருக்கும் பிரதமர் தகுதியில்லையா?: கே.பி.முனுசாமி காட்டமான பதிலடி

அணைக்கட்டு: அண்ணாமலை தூய்மையானவர் என பேசக்கூடாது. பாஜவில் மோடியை தவிர யாருக்கும் பிரதமர் தகுதியில்லையா? என்று கே.பி.முனுசாமி காட்டமான பதிலடி தந்து உள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் அதிமுக சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் ரீதியாக இன்னும் பக்குவப்படவில்லை என நான் கருதுகிறேன். ஏனென்றால் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா நரேந்திர மோடியை முன்னிறுத்தி இருக்கிறது. தமிழக மாநிலத் தலைவரும் அதை முன்னிறுத்தி தான் எங்கு சென்றாலும் இந்த கருத்தையே பேசி வருகிறார். அவரை நான் கேட்கிறேன் பாரதிய ஜனதா கட்சியில் ஆறு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என சொல்லி இருக்கிறார்கள். அந்த ஆறு கோடி பேரில் பிரதமர் நரேந்திர மோடியை தவிர வேறு யாருக்கும் பிரதமராகும் தகுதி இல்லையா என நான் கேட்க விரும்பவில்லை. அப்படி கேட்டால் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

நரேந்திர மோடியை பிரதமராக முன்னிறுத்துகிறார்கள் என்றால் அவர் 10 ஆண்டுகளாக பிரதமராக உள்ளார். கட்சியின் தலைவர் என்ற முறையிலும் அவரை முன்னிறுத்துவது தான் நியதி. அதே அடிப்படையில் தான் நான்கு ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த எடப்பாடியை முதல்வராக நாங்கள் முன்னிறுத்துகிறோம். அண்ணாமலை சொல்கிறார், 300, 400 தொகுதிகளில் வென்று பிரதமராவார் என்று. 300 தொகுதிகளில் தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள் என நான் கேட்டதற்கு பதில் இல்லை. நாங்கள் மாய உலகத்தில் இருக்கிறோம் என்கிறார் அண்ணாமலை. தேர்தல் வரும்போது தெரியும் யார் மாய உலகத்தில் இருக்கிறார்கள் என்று. இதுபோன்ற தான்தோன்றித்தனமான செயல்களில் அவர் சென்று விடக்கூடாது, அரசியலில் பக்குவப்பட வேண்டும். ஏதோ அவர் மட்டும் தூய்மையானவர் என பேசக்கூடாது. ஊழல் எல்லா இடங்களிலும் உள்ளது. அதை எடுத்துச் சொன்னால் தாங்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் குடிநீர் பஞ்சத்தால் நலியும் கிராமங்கள்: ஆபத்தான கிணறுகளில் தண்ணீர் சேகரித்து அல்லலுறும் பெண்கள்

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு