‘அக்யூஸ்ட்’ என சொன்ன விஏஓ மீது கோபம் போலீசிடம் பஞ்ச் டயலாக் பேசிய வரிச்சியூர் செல்வம்: பெசன்ட்நகரில் நடந்த கன்ஷூட் ; பரபரப்பு தகவல்

விருதுநகர்: ‘அக்யூஸ்ட்’ என கூறிய விஏஓ மீது வரிச்சியூர் செல்வம் கோபமடைந்தார். கைது செய்ய சென்ற போலீசிடம் பஞ்ச் டயலாக் பேசி உள்ளார். கூட்டாளியை பெசன்ட்நகரில் தீர்த்துக்கட்டியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. விருதுநகர், அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (37). மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி. ஒரு கட்டத்தில் செந்தில்குமார் தன்னை மீறி வளர்வதாக அவர் மீது, வரிச்சியூர் செல்வத்திற்கு கோபம் ஏற்பட்டது. செந்தில்குமாரை பழிவாங்க நினைத்த வரிச்சியூர் செல்வம், தனது கூட்டாளிகள் உதவியுடன் சிலைமான் கொலை வழக்கு ஒன்றில் கொலையாளிகள் பட்டியலில் அவரது பெயரை சேர்த்தார். வரிச்சியூர் செல்வத்தை சந்தித்து பேசிய செந்தில்குமார், ‘நான்தான் உங்களைவிட்டு விலகி விட்டேனே? எதற்கு எனது பெயரை சேர்க்கிறீர்கள்?’ என கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வரிச்சியூர் செல்வம், செந்தில்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். விருதுநகருக்கு வந்த வரிச்சியூர் செல்வம், செந்தில்குமாரை சந்தித்து, ‘சென்னையில் வேலையிருக்கிறது. முடித்து விட்டு வா. சிலைமான் வழக்கிலிருந்து விடுவித்து விடுகிறேன்’ என ஆசை வார்த்தை கூறி ரூ.20 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதில் தனது மனைவியிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்த செந்தில்குமார், ரூ.5 ஆயிரத்துடன் வரிச்சியூர் செல்வம் கூட்டாளிகள் 5 பேருடன் சென்னை சென்றார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு அவரை அழைத்துச் சென்ற வரிச்சியூர் செல்வம் கூட்டாளிகள், அவரை கொடூரமாக சுட்டு கொன்றனர். பின்னர் அவரது உடலை மதுரை கொண்டு வந்து, அங்கிருந்த வரிச்சியூர் செல்வமும் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் கைகளை வெட்டி வீசி சென்றனர்.

இதனிடையே செந்தில்குமாரின் மனைவி முருகலெட்சுமி, கணவரை காணவில்லை என விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். மேலும் கணவரை மீட்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை ஏஎஸ்பி கருண் கார்க் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், செந்தில்குமார் கடைசியாக தொடர்பில் இருந்த வரிச்சியூர் செல்வத்தை நேற்று முன்தினம் மதுரை அண்ணா நகரில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் செந்தில்குமாரை கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிந்து சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

முன்னதாக, போலீசார் கைது செய்ய சென்றபோது வரிச்சியூர் செல்வம், ‘காணாத கடவுளுக்கும் காக்கும் காக்கிக்கும் பயந்து, பணிந்து நடப்பேன்’ என வசனம் பேசி விசாரணையில் நல்லபிள்ளையாக நடந்து கொண்டுள்ளார். மேலும், தாமிரபரணி ஆற்றில் செந்தில்குமாரின் உடலை வீசியதாக வைகுண்டம் பகுதியில் ஒரு இடத்தை காட்டி உள்ளார். அப்போது உடனிருந்த விஏஓ ஒருவர், ‘பிரபல விஐபியுடன் சேர்ந்து போட்டோ எடுத்த நீங்க அக்யூஸ்ட் ஆக இருக்கலாமா?’ என கேட்டுள்ளார். அதற்கு வரிச்சியூர் செல்வம், ‘ரவுடி என என்னை நீங்க சொல்லக்கூடாது. போலீசுக்கு தான் சொல்ல உரிமையிருக்கு… உங்களுக்கு உரிமையில்லை’ என கோபத்துடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கூட்டாளி செந்தில்குமாரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் வரிச்சியூர் செல்வம் நடித்து காட்டினார்.

* தங்கையிடம் நகைகள் சேப்

வரிச்சியூர் செல்வம் உடல் முழுவதும் நகைகள் அணிந்திருப்பது வழக்கம். போலீசார் கைது செய்ய சென்றபோது அணிந்திருந்த நகைகளை கழற்றி தங்கையிடம் கொடுத்துவிட்டார். வரிச்சியூர் செல்வம் அளித்த தகவலின் பேரில் சென்னையில் செந்தில்குமாரை கொலை செய்த 5 பேரை தேடும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்