அம்மாபேட்டை அருகே ஆட்டை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு

பவானி : அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை, சித்தையன் நகரைச் சேர்ந்தவர் ராமன் (47). இவர், பாலமலை அடிவாரத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வருவதோடு, கால்நடைகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கால்நடைகளை விவசாயத் தோட்டத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் நேற்று காலை வந்து பார்த்தபோது பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆட்டை காணவில்லை.

இந்த நிலையில் பாலமலைக்கு நடந்து சென்றவர்கள் மலைப்பாதையில் வேப்ப மரத்தின் மீது ரத்த வெள்ளத்தில் ஆடு தொங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து, மேட்டூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மேட்டூர் வனத்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாலமலை பகுதியில் வன விலங்குகள் அதிகம் வசித்து வரும் நிலையில், விவசாய தோட்டத்தில் நுழைந்த மர்ம விலங்கு ஏதேனும் ஆட்டை இழுத்துச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அந்த மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என கூறப்படுவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தானியங்கி கேமரா வைத்து மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்டுபிடித்து, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்