பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அதிபர் விக்ரமசிங்கே வரும் 21ம் தேதி இந்தியா வருகை: தமிழக மீனவர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே முதல் முறையாக வரும் 21ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வர உள்ளார். அப்போது தமிழக மீனவர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு விக்ரமசிங்கே முதல் முறையாக வரும் 21ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வர இருப்பதாக தகவல்கள் aவெளியாகி உள்ளன. அவரது வருகைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அடுத்த வார தொடக்கத்தில் இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவத்ரா இலங்கை செல்ல இருப்பதாக கொழும்பில் உள்ள டெய்லி மிரர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விக்ரமசிங்கே டெல்லி புறப்படுவதற்கு முன்னதாக இந்தியா உதவியின் கீழ் மின்சாரம், எரிசக்தி, விவசாயம் தொடர்பான திட்டங்களை இறுதி செய்வார் என கூறப்படுகிறது. அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சார, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரா, வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோர் வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. அப்போது, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு லைசன்ஸ் தருவது தொடர்பான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. சர்வதேச நாணயத்தின் நிதி உதவி பெறுவதில் இந்தியாவின் ஆதரவை விக்ரமசிங்கே கேட்பார் என தெரிகிறது.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.