அமெரிக்காவில் பலத்த சூறாவளி; 5 பேர் பலி

மிசோரி: அமெரிக்காவின் தெற்கு மிசவுரியில் ஏற்பட்ட சூறாவளி புயல் காற்று காரணமாக 5 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பனிப்புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் மிரட்டி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர். ஏற்கனவே அமெரிக்காவில் வருகிற 10ம் தேதி வரை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய பலத்த புயல் காற்றினால் ஆர்கன்சாஸ், ஒக்லகாமா, இல்லினாயிஸ், டென்னசி, அயோவா, மிசிசிபி உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. ஏராளமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதமடைந்தன. ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

இதனால் அந்நாட்டின் நகரங்கள் இருளில் மூழ்கின. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மீட்பு படையினர், சாலைகளில் விழுந்த மின் கம்பங்கள் மற்றும் மரங்களை அகற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் அங்கு சுமார் 60 புயல்கள் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மற்றொரு மாகாணமான இல்லினாய்ஸில் பெல்விடேரில் ஒரு திரையரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சினிமா பார்த்து கொண்டிருந்த 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த புயல் காற்றால் ஏராளமான மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த புயல் காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் தெற்கு மிசவுரியில் நேற்று வீசிய சூறாவளி புயலுக்கு 5 பேர் பலியானார்கள். பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள் தரைமட்டமானது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இங்கு மீட்பு பணியில் குழுவினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை