கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக ஆயத்தம்?.. கோகுல இந்திரா பரபரப்பு பேட்டி

சென்னை: பா.ஜ.க.வை வளர்ப்பதற்காக அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளை அண்ணாமலை விமர்சிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய சென்னை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடக் கோரி முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விருப்ப மனு அளித்தார். அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய நிலையில் எடப்பாடி பழனிசாமிக்காக விருப்ப மனு அளித்தார். பின்னர் பேட்டியளித்த அவர்; ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்ததால் கூட்டணியை முறித்துள்ளோம். பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தை அதிமுகவிடம் இருந்து பா.ஜ.க. பறிக்க பார்க்கிறதா என்ற கேள்விக்கு கோகுல இந்திரா காட்டமான பதிலளித்தார்.

அதிமுக கிளைக்கழகம் முதல் படிப்படியாக வளர்ந்த கட்சி, சிலர் நேற்று திருமணம் செய்து இன்றே குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். அண்ணாமலையின் செயல்பாடுகள் பா.ஜ.க.வை அவர் தவறாக வழிநடத்திச் செல்வதை போல் தெரிகிறது. பா.ஜ.க., அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதனை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என சிலர் இருந்தார்கள். பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டதால் தற்போது பா.ஜ.க. கூட்டணிக்கு செல்ல கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கதவை திறந்து வைத்துள்ளேன், ஜன்னலை திறந்து வைத்துள்ளேன் என்று பா.ஜ.க. கூறினாலும் எந்த கட்சியும் செல்லவில்லை.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமையாவிட்டால் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட அதிமுக ஆயத்தமாகி வருகிறது. கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை இருக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியதாக கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் முடிவு எட்டப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்