போலி ஆவணம் தயாரித்து அதிமுக பிரமுகர் 80 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக புகார்: திண்டுக்கல் எஸ்பி ஆபீசில் மனு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூம்பாறையை சேர்ந்த முருகன் நேற்று திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்திற்கு வந்து ஏடிஎஸ்பி சந்திரனிடம் ஒரு புகார் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: கொடைக்கானல் பூம்பாறை பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவர் அதிமுக ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவர் தனது ஆதரவாளர்களான வாசு, சரவணன் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து பூம்பாறை பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலத்தை அவர்களுக்கே தெரியாமல் அதிகாரிகளை பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் மாற்றி உள்ளனர். சுமார் 80 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களை தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் உள்ள நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

இவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்து பல கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலத்தை விற்பனை செய்துள்ளனர். எனது 3 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நான் போலீசில் புகார் அளிக்க சென்றேன். அப்போது ஜெயபால், ‘புகார் அளித்தால் உன்னை கொலை செய்து விடுவேன்’ என மிரட்டுகிறார். எனவே நிலங்களை மீட்டு தருவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற ஏடிஎஸ்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

 

Related posts

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்