ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நாளை தண்ணீர் திறக்க நடவடிக்கை

*திருட்டை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த பிஏபி திட்டத்திற்குட்பட்ட ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும், குடிநீர் தேவைக்கும் அவ்வப்போது தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை பொழிவு போதியளவு இல்லாததால், ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தேவையான தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு, உடுமலை ரோடு பிஏபி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு 11ம் தேதி முதல் தண்ணீர் திறப்பது குறித்த நடவடிக்கையை பொது பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

ஆனால், தண்ணீர் திறப்புக்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில், ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் திறப்புக்கான எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஏற்கனவே தெரிவித்ததுபோல் நாளை (11ம் தேதி) தண்ணீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இது குறித்து பொது பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு 11ம் தேதி (நாளை) தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான கருத்துரு அரசுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. 10ம் தேதி (இன்று) அதற்கான உத்தரவு வரப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. முறையான உத்தரவு வந்தவுடன், குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

இந்நிலையில் நேற்று, பொள்ளாச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர் முகாமில், ஆழியார் நீர்த்தேக்க திட்டக்குழு சார்பில், அதன் தலைவர் செந்தில் தலைமையில் உதவி கலெக்டர் பிரியங்காவிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: ஆழியார் புதிய ஆயக்கட்டுக்கு 11ம் தேதி (நாளை) முதல் பாசன நீர் திறக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, பாசன பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், பாசன நீரை கடைமடை வரை சீராக கொண்டு சேர்க்கும் பொருட்டு, புதிய கால்வாய்களில் முறைகேடாக தண்ணீர் திருடுவதை தடுக்க நீர்வளத்துறை, வருவாய்த்துறை, காவல்த்துறை, மின்சாரத்துறை மற்றும் பாசன சபை தலைவர்கள் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும், பாசன நீரை முறைகேடாக எடுப்பவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அசாமில் மழையால் 3.5லட்சம் பேர் பாதிப்பு