ஐஸ்வர்யா மேனன் ஃபிட்னெஸ் டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

காதலில் சொதப்புவது எப்படி என்கிற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின், ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் 2, நான் சிரித்தால், தீயா வேலை செய்யணும் குமாரு, வேழம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதைத்தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு கன்னட படத்திலும் 2 மலையாள படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது, ஐஸ்வர்யா நடிகையாக இருப்பதோடு மாடலும் ஆவார். ஐஸ்வர்யா மேனன் தனது பிட்னெஸ் குறித்து பகிர்ந்து கொள்கிறார்:

நான் சிறுவயதில் மிகவும் குண்டாக இருந்தேன், என் உருவத்தின் காரணமாக, பள்ளிப் பருவத்தில் குண்டாக மற்றும் மைதா உருண்டை போல உருண்டையாகத் தெரிகிற பெண்ணாகவும் பார்க்கப்பட்டு மிகவும் கேலி செய்யப்பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் மிகவும் வருந்தியிருக்கிறேன்.

நாளடைவில், என் உருவத்தை வைத்து கேலி செய்வதை நான் விரும்பவில்லை. அந்த நிமிடத்தில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். நான் இனி இப்படி இருக்கக் கூடாது என்று என்னிடம் நானே சொல்லிக் கொண்டேன். அப்போதுதான் என் உடற்பயிற்சி பயணம் தொடங்கியது. என் மீது விழுந்த ஒவ்வொரு கேலியையும் ஆக்கபூர்வமான விமர்சனமாக எடுத்துக்கொண்டேன் மற்றும் அன்றிலிருந்து மிகவும் கடினமாக உழைத்தேன்.

ஒரு கட்டத்தில், உடல் எடையை குறைத்து, ஒல்லியாவதற்காக அனைத்துவித முட்டாள்தனமான டயட் முறைகளையும் ஃபாலோ செய்தேன். அதன்விளைவு நானே அதிர்ச்சியாகும் வகையில் ஒல்லியாகிவிட்டேன். அப்போதுதான் நான் உணர்ந்தேன். மற்றவர்களை கவர்வதற்காக உடல் எடையை குறைத்து ஒல்லியானது சரியானதல்ல. ஒல்லியாக இருப்பதை விட, ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் என்று. அதன்பிறகுதான், ஒல்லியாக இல்லாமல் ஃபிட்டாக மாறுவதற்கான உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தேன்.என்னை கேலி செய்தவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். அவர்கள் என்னை இப்படி அவமானப்படுத்தாமல் இருந்திருந்தால், ஃபிட்னெஸை இவ்வளவு சீரியஸாக எடுத்திருக்க மாட்டேன்.

ஒர்க்கவுட்ஸ்: எனது உடற்பயிற்சி பயிற்சிகளில் பைலேட்ஸ் மற்றும் யோகாவும் உண்டு. அது எனது உடலில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், தசைகளை வலுப்படுத்தவும், ஒட்டுமொத்த உடல் சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், யோகா குறிப்பாக என் சுவாசத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.அதுபோன்று, குத்துச்சண்டைப் பயிற்சியும் தவறாமல் எடுத்துக் கொள்கிறேன். அது எனது ஆரோக்கியத்தையும், கார்டியோ வாஸ்குலர் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. மேலும், கை, கண் மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

அதுபோன்ற, ஹை இன்டன்ஸிட்டி இன்டர்வல் டிரைனீங்( High intensity interval training) பயிற்சிகளும் மேற்கொள்கிறேன். இது எனது உடலில் கலோரி மற்றும் கொழுப்பை அதிகப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், சகிப்புத்தன்மை மற்றும் கார்டியோ வாஸ்குலர் ஃபிட்னஸை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், தசைகளை வலுப்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த உடல் அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. இது ஒரு நடிகைக்கு மிகவும் முக்கியமானது, இதுவே திரையில் தோன்றும்போது அழகான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
டயட்: டயட் எனும்போது, அதிக கொழுப்புச் சத்து அடங்கியுள்ள எந்த உணவையும் நான் எடுத்துக்கொள்வதில்லை.

மாறாக என் உடலுக்கு எனர்ஜி கிடைக்கும் வகையில் சமச்சீர் உணவையே கடைப்பிடிக்கிறேன். எனக்கு பிடித்த உணவுகள் என்றால், பீட்சா, இட்லி, தோசை, பிரியாணி, ஐஸ்கீரிம், சாக்லேட் இவை எல்லாம் ரொம்பவும் பிடிக்கும். ஆனால், இவை இப்போது மிகமிக குறைந்த அளவே எடுத்துக்கொள்கிறேன். அப்படியே ஒவ்வொரு சமயம், அதிகம் உண்டுவிட்டதாக உணர்ந்தால், அடுத்த நாள், உணவு எதுவும் உட்கொள்ளாமல், பட்டினியாக இருக்கவும். தயங்குவதில்லை. இதுவே ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

பியூட்டி: பியூட்டி என்றால் என்னுடைய தலைமுடியை பராமரிக்க எந்தவித ஜெல்லையும் பயன்படுத்துவதில்லை. எனது பியூட்டிஷியன் ஆலோசனைப்படி நேச்சுரல் ஹேர் பேக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறேன். முகத்துக்கும், தேங்காய் எண்ணெய், பப்பாளி, கற்றாழை, வாழைப்பழம், வெள்ளரிச்சாறு, தேன்,தயிர் போன்றவற்றையே பயன்படுத்துகிறேன். சூட்டிங் ஸ்பாட்டில் அதிகநேரம் இருப்பதால், வெயிலில் ஸ்கின் டேனிங் ஆகாமல் இருக்க, ஸ்ன்ஸ்க்ரீன் பயன்படுத்துவேன் அவ்வளவுதான்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Related posts

கோடையில் குளிர்ந்த நீர் அருந்தலாமா?

மசாலாக்களின் மறுபக்கம்…

சின்னம்மையும் ஆயுர்வேத தீர்வும்!