சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய காவல் – ரோந்து” திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் , சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய காவல் – ரோந்து” திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கைது செய்து குற்றங்களை குறைக்க புதிய யுக்திகள் மற்றும் நவீன திட்டங்கள் கையாளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்கள், செயலிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப. காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் இன்று (14.03.2024) காலை, சென்னை, மீனம்பாக்கம், விமான நிலைய வளாகத்தில், பயணிகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக “விமான நிலைய காவல்- ரோந்து (Airport Police – patrol) திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்து 10 காவல் ஆளிநர்களுக்கு பேட்ஜ்கள் வழங்கினார்.

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் மற்றும் உடன்வருவோரையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாக்க, சென்னை பெருநகர காவல்துறையின் புதிய முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என காவல் ஆணையாளர் தெரிவித்தார். இதற்காக, பயிற்சி பெற்ற 10 காவலர்கள், இத்திட்டத்திதற்கென வழங்கப்பட்டுள்ள 2 பிரத்யேக ரோந்து வாகனம், 1 பேட்டரி வாகனம் மற்றும் நவீன சாதனங்களுடன் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவர்.

மேலும், வயதான நபர்கள், வெளிநாட்டு நபர்களுக்கு தேவைப்படும் விவரங்களை வழங்கவும், உதவிகள் செய்யவும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர். இதனால் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்படுவதுடன் பயணிகளின் உடைமைகள் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பர்.

மேலும், புதிதாக வரும் பயணிகளுக்கு டாக்சி வாகன உதவி, அவசர உதவி, போன்றவைகள் கிடைக்கவும் வழிகாட்டவும், விமான நிலைய காவல்-ரோந்து காவல் ஆளிநர்கள் பணியாற்றுவதால், பயணிகளை ஏமாற்றும் மோசடி நபர்களிடமிருந்து பயணிகள் பாதுகாக்கப்படுவர்.

இந்நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குநர் C.V.தீபக், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையாளர்கள் M.R.சிபிசக்ரவர்த்தி, (தெற்கு மண்டலம்) மகேஷ்குமார், இ.கா.ப (போக்குவரத்து தெற்கு) மத்திய தொழிற் பாதுகாப்பு படை துணைத்தலைவர் K.V.K.ஶ்ரீராம், புனித தோமையர்மலை துணை ஆணையாளர் மருத்துவர் M.சுதாகர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்: ஒன்றிய அரசு

தூத்துக்குடி துறைமுகத்தில் முந்திரி ஏற்றுமதியாளரிடம் ரூ.6 கோடி மோசடி

3 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி சென்றார்