அதிமுக ஆதரவாளருக்கு சொந்தமான கோழிப்பண்ணை அலுவலகத்தில் 32 கோடி ரூபாய் பறிமுதல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோழிப்பண்ணை அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டதாக என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்தவர் அருள்முருகன். இவரது சகோதரர் சரவண முருகன். இருவரும் சேர்ந்து ஊஞ்சவேலம்பட்டி உள்ளிட்ட 4 இடங்களில் எம்பிஎஸ் என்ற பெயரில் கோழிப்பண்ணை வைத்து தொழில் செய்து வந்தனர்.

இக்கோழிப்பண்ணைகளின் தலைமை அலுவலகம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ளது. கோழிப்பண்ணைகளுக்கான அனைத்து கணக்கு வழக்குகள் இந்த அலுவலகத்தில் தான் நடைபெறுகிறது. இந்த அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலேயே வருமான வரித்துறையின் பொள்ளாச்சி கிளை அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில் வெங்கடேசா காலனியில் உள்ள கோழிப்பண்ணை தலைமை அலுவலகத்திற்கு நேற்று இரவு 11 மணியளவில் திடீரென வருமான வரித்துறையினர் தனி வாகனத்தில் வந்திறங்கினர். பின்னர் அலுவலகத்திற்குள் சென்று உரிமையாளர்கள் அருள்முருகன், சரவணமுருகன் ஆகியோரை வரவழைத்தனர். இரவில் பணியிலிருந்த ஊழியர்கள் மற்றும் காவலர்களை உள்ளேயே வைத்து விசாரித்தனர். விடிய விடிய அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தணிக்ைகக்குப் பிறகு கணக்கில் வராத ரொக்கம் ரூ.32 கோடி இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை அவர்கள் பறிமுதல் செய்தனர். காலையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. பொள்ளாச்சி கோழிப்பண்ணை தலைமை அலுவலகத்தில் விடிய விடிய நடந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் நேரத்தில் கணக்கில் வராத பணம் ரூ.32 கோடி பிடிபட்டதால் இது வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற கோணத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருள்முருகன், சரவணமுருகன் ஆகிய இருவரும் அதிமுக ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்