விதைத்தேர்வே விளைச்சலைத் தீர்மானிக்கும்!

சுவர் இருந்தால் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். அதேபோல நல்ல விதை இருந்தால்தான் விவசாயம் சிறப்பாக அமையும். எந்தப் பயிராக இருந்தாலும் விதைத் தேர்வு என்பது முக்கிய அம்சமாகிறது. சிலர் இதில் கோட்டை விட்டு விடுகிறார்கள். சிலர் ஏனோ தானோவென்று விதைகளை வாங்கிப் பயிர் செய்யத் தொடங்கி விடுகிறார்கள். இதனால் விதையில் சரியான முளைப்புத்திறனே இருக்காது. அப்படியே முளைத்தாலும் அது போதிய வளர்ச்சி பெறாது. வளர்ந்தாலும் உரிய பருவத்தில் காய்க்காது. அப்படியே காய்த்தாலும் அது முழுமையான விளைச்சலாக இருக்காது. இதனால் விதைத் தேர்வை மிகவும் கவனமாக கையாள வேண்டும். சிறுதானியங்கள் தொடங்கி காய்கறி உள்ளிட்ட பயிர்களுக்கும் இது பொருந்தும்.இதை உணர்ந்த விவசாயிகள் சரியான விதையைத் தேர்ந்தெடுத்து, சாதித்து விடுகிறார்கள்.

விதைத்தேர்வு எப்படி இருக்க வேண்டும்? அதில் கையாள வேண்டிய சூட்சுமங்கள் என்னென்ன? என்ற கேள்விகளோடு திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகா மற்றும் வேளாண்மை அலுவலர் மகேஸ்வரன் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். அவர்கள் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். “விவசாய பெருமக்கள் விதைத்தேர்வில் அதிக அக்கறை எடுத்து பயிரிட்டால் அதிக மகசூல் எடுத்து விடலாம். ஒரு நிலத்தில் விளையும் விதையைக் கொண்டு அதே நிலத்தில் வருடந்தோறும் பயிரிடுவதனால் விதையின் வீரியம் நாளடைவில் குறைந்து பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். தனது நிலத்திலேயே விளைந்த வித்தையே விதைக்க ஒரு விவசாயி விரும்பினால் மணிகள் நன்கு முதிர்ந்து திரண்டு சீராக முற்றிய பயிர்களில் இருந்து விதைகளை அறுவடை செய்ய வேண்டும். நன்கு பெருத்து திரண்ட வித்தில் பயிர் முளைத்து செழிப்பாக வளர்வதற்கு தேவையான உணவு முளைக்கருவில் இருக்கும். அவ்வாறு பெருத்து திரண்ட வித்தைப் பெறுவதற்கு விவசாயிகள் பயிர் வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் இருந்து அடியுரமாகவோ, மேலுரமாகவோ இட வேண்டிய சத்துக்களை சரிசம விகித அடிப்படையில் இடுதல் அவசியம் ஆகும். இந்த முறையில், விதைக்கென்று பயிரிடப்பட்ட வித்துக்களை ஒரு வருடத்திற்குள் சேகரித்து வைப்பது சிறந்ததாகும்.

ஒரு வருடத்திற்கு மேல் சேகரித்து வைத்து விதைக்கும் பட்சத்தில் அதன் முளைப்புத்திறன் பாதிக்கப்படும். அவ்விதம் விதைக்கென அறுவடை செய்யப்பட்ட வித்துக்களை பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும். “காய்ந்த வித்திற்கு பழுதில்லை” ஆதலால் வித்துக்களை வெயிலில் சீராக உலர்த்தி, வித்துக்களின் ஈரத்தன்மை நெல்லிற்கு 13 சதவீதத்திற்குள்ளும், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, எள், தட்டைப்பயறு போன்றவற்றிற்கு 9 சதவீதத்திற்குள்ளும், பருத்திக்கு 10 சதவீதத்திற்குள்ளும், மக்காச்சோளம், கம்பு, ராகி, தினை போன்றவற்றிற்கு 12 சதவீதத்திற்குள்ளும் இருக்குமாறு காய வைத்து சேமிக்க வேண்டும்.சேமிக்கும்போது விதை நன்றாக காயாமல் இருந்தால் அதில் உள்ள முளைக்கரு உஷ்ணத்தினால் புழுங்கி அல்லது முளைத்து நாசம் அடைந்துவிடும். மேலும், இவ்வாறு விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைவித்து, பொறுக்கி எடுத்த விதைகளை ஒரே நிலத்தில் வருடந்தோறும் திரும்பத் திரும்ப பயிரிட்டு வந்தால் அதன் வீரியம் நாளடைவில் குறைய ஆரம்பிக்கும் என அறிதல் அவசியம். ஆதலால் விவசாய பெருமக்கள் வித்தை மாற்றுவது சிறந்த பலனைத் தரும். அதற்கு அவர்கள் அருகில் பயிரிடும் வேறு ஒரு விவசாயிடம் விதையை வாங்கி பயிரிடுவது நன்மை பயக்கும்.

லேசான மணல் கலந்த நிலத்தில் விளைந்த வித்தை களிமண் பாங்கான நிலத்தில் விளைவித்தால் உயர் மகசூல் தரும் வாய்ப்பு அதிகம். ஒரு பயிருக்கான அடிப்படை விதைதான். சான்றளிக்கப்பட்ட விதைகளை அதனதன் மூட்டைகளில் அடைத்து அதற்குரிய அட்டைகளை முறையே வெள்ளை, நீலநிற அட்டைகளை இணைத்து உபயோகப்படுத்தும் முன் அந்த விதை வித்து எந்தத் தன்மையுள்ள மண்ணில் விளைந்தது என்ற குறிப்பு இருந்தால் உபயோகமாக இருக்கும். அதன் மூலம் செம்மண், மணல் சார்ந்த நிலத்தில் விளைந்த வித்தை களிமண் நிலத்திலும், களிமண்ணில் விளைந்த வித்தை செம்மண் நிலத்திலும் விளைவித்து உயர் மகசூல் பெற வழிவகை செய்யலாம்.ஆதலால், விதை வித்துக்களை விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொழுதும், சேமித்து பயன்படுத்தும்போதும், அதே விதைகளைப் பயன்படுத்தாமல் வித்துக்களை மாற்றிப் பயிரிடுவது சிறந்த பலனைத் தரும். இவ்வாறு கவனமாக முடிவுகளை எடுத்து பயிர் செய்து உயர் மகசூல் பெறலாம்’’ என்கிறார்கள்.
– தொடர்புக்கு:
ம.மகேஸ்வரன்: 94424 89728.

Related posts

மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே வா’ என்றதால் டிரைவர் மீது பாட்டில் வீச்சு: தப்பிய மர்ம நபருக்கு வலை

நெடுங்குன்றம் ஊராட்சியில் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆசிரியையிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு சரமாரி தர்மஅடி: கோயம்பேட்டில் பரபரப்பு