அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு தடை விதிக்க கோரிய இபிஎஸ் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்தார். இந்நிலையில், மனு மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது.

அப்போது ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் வாதிடும்போது, கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்த தங்களுக்கு தடை விதிக்கப்பட்டால் தேர்தல் ஆணையத்தை நாட முடியாத நிலை ஏற்படும் என்று கூறினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா என்று கேட்டார்.

அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது தவறு என்று எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை.

ஒருங்கிணைப்பாளர் என்று அவர் தன்னை அழைத்துக்கொள்வதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதை எதிர்க்கிறோம். வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என்று அழைத்துக்கொள்ளட்டும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Related posts

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு

தங்கம் விலை பவுனுக்கு 120 குறைந்தது