ஆதனூர் ஊராட்சியில் குடும்பத்திற்கு தலா 2 கிலோ தக்காளி: திமுக ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்

கூடுவாஞ்சேரி: ஆதனூர் ஊராட்சியில் ஒரு குடும்பத்திற்கு தலா 2 கிலோ தக்காளியை திமுக ஊராட்சி மன்ற தலைவர் இலவசமாக வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில், ஆதனூர், டிடிசி நகர், லட்சுமிபுரம், பலராமபுரம், கொருக்கந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், தமிழகத்தில் ரூ.30 வரை விற்று வந்த தக்காளி தற்போது ரூ.180 வரை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை காரணம் காட்டி மற்ற காய்கறி விலைகளையும் வியாபாரிகள் உயர்த்தி உள்ளனர்.

இதனால், அடித்தட்டு மக்கள் தக்காளி மற்றும் காய்கறிகளை வாங்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆதனூர் ஊராட்சியில் உள்ள வெளிச்சம் அறக்கட்டளை சார்பில் ரூ.11 லட்சம் செலவில் 10 ஆயிரம் கிலோ தக்காளியை ஊராட்சியில் உள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்கு குடும்ப அட்டை வாரியாக தலா 2 கிலோ தக்காளி இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடந்தது. இதில், ஒன்றிய திமுக மகளிரணி செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான மலர்விழிதமிழ்அமுதன் தலைமை தாங்கினார்.

வெளிச்சம் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் தமிழ்ச்செல்வன், ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்விரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வெளிச்சம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரும், ஆதனூர் திமுக ஊராட்சி மன்ற தலைவருமான தமிழ்அமுதன் கலந்துகொண்டனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்போடு 5 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 2 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கினார். இதில், ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்களும் வரிசையில் நின்று தக்காளியை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொள்கைக் கூட்டணிக்கு 40/40 தொகுதியிலும் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்: அமைச்சர் உதயநிதி

இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை பொதுமக்கள் வழங்கவில்லை: தேர்தல் முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா