பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு மத்தியில் அபுதாபியில் முதல் இந்து கோயில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்: ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றி கூறினார்

அபுதாபி: அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது மனித குல வரலாற்றில் பொன்னான அத்தியாம் என புகழ்ந்து பேசினார். கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த போது, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்காக கோயில் கட்ட வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று இந்து கட்ட, அபுதாபியில் துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு ஒதுக்கியது அங்கு கடந்த 2019ம் ஆண்டு கோயில் கட்டும் பணியை குஜராத்தை சேர்ந்த சுவாமி நாராயண் அறக்கட்டளை (பிஏபிஎஸ்) தொடங்கியது.

ரூ.700 கோடி செலவில் பாரம்பரிய அமைப்புடன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள அபுதாபியின் முதல் இந்து கோயிலான இக்கோயில் திறப்பு விழா நேற்று நடந்தது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றார். திறப்பு விழாவைக் காண அபுதாபியில் வாழும் ஏராளமான இந்தியர்கள், குறிப்பாக தென் இந்தியாவைச் சேர்ந்த மக்கள் அவரவர் பாரம்பரிய ஆடையில் கோயிலுக்கு வந்திருந்தனர். சுவாமி நாராயண் பிரிவைச் சேர்ந்த ஆன்மீக தலைவர்கள் பிரதமர் மோடியை வரவேற்று கோயில் குறித்து விளக்கினர்.

பின்னர் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு மத்தியில், திறப்பு விழா சடங்குகளில் பங்கேற்ற பிரதமர் மோடி கோயிலை முறைப்படி திறந்து வைத்தார். மேலும், கோயிலுக்கு மெய்நிகர் முறையில் கங்கை, யமுனா நதிகளின் புனித நீரை வழங்கினார். கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர், முருகர், சிவபெருமான், பார்வதி, பூரி ஜெகன்நாதர் மற்றும் சுவாமி நாராயண் விக்ரங்களை தரிசனம் செய்து வழிபட்டார். கோயில் வளாகத்தில் பக்தர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்த கோயில் மத நல்லிணக்கம், ஒற்றுமையின் அடையாளம். இக்கோயில் உருவானதில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் சயீத் பங்கு மிகப்பெரியது. அவர் 140 கோடி இந்தியர்களின் மனதை வென்றுள்ளார் ’’ என்றார்.

புர்ஜ் கலிபாவில் மூவர்ணக் கொடி
* துபாயில் நடந்த உலக அரசுகள் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, அங்குள்ள உலகப் புகழ் பெற்ற புர்ஜ் கலிபா கட்டிடத்தில் வண்ண விளக்குகளால் மூவர்ண தேசியக் கொடி ஒளிரப்பட்டது.
* துபாயில் உலக அரசுகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இன்றைய உலகில், அனைவரையும் உள்ளடக்கிய, ஊழல் இல்லாத அரசுகள் தான் தேவை. கடந்த சில ஆண்டாக இந்தியாவில் அரசின் உறுதிப்பாடு மற்றும் நோக்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்’’ என்றார்.

கோயிலின் சிறப்பம்சங்கள்
* அபுதாபி இந்து கோயில் கட்ட நிலம் வழங்கிய ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யன் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். கோயில் கட்டிட தலைமை வடிவமைப்பாளர் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். திட்ட மேலாளர் சீக்கியர். கோயில் அடித்தள வடிவமைப்பாளர் புத்த மதத்தை சேர்ந்தவர். கட்டுமான நிறுவனம் பார்சி மதத்தை சேர்ந்தவருக்கு சொந்தமானது. அதன் இயக்குநர் ஜெயின் மதத்தை சேர்ந்தவர்.
* அயோத்தி ராமர் கோயில் போல அபுதாபி கோயிலும் நாகரா கட்டிடக் கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
* ஐக்கிய அரபு அமீரகத்தில் 7 அமீரங்கள் உள்ளதை குறிப்பிடும் வகையில், அபுதாபி கோயிலில் 7 கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.
* பாலைவனப் பகுதியில் கோயில் அமைந்துள்ளதால், அதிக வெயிலிலும் பக்தர்கள் கோயில் பிரகாரத்தில் நடந்து செல்ல வேண்டுமென்பதால் எந்த இடத்திலும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை.
* வெப்பத்தை எதிர்க்கும் நானோ டைல்ஸ் மற்றும் கனரக கண்ணாடி பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
* இளஞ்சிவப்பு ராஜஸ்தான் கற்கள் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கல் இந்தியாவில் செதுக்கப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு கொண்டு செல்லப்பட்டது.
* வெப்பநிலை, அழுத்தம் மற்றும் நில அதிர்வு ஆகியவற்றை அளவிட 300 க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப சென்சார்கள் கோயிலில் நிறுவப்பட்டுள்ளன. இவை நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும்.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு