ஷட்டரில் மின்கசிவு காரணமாக மின்சாரம் பாய்ந்து கடைக்காரர் பலி

பெரம்பூர்: புளியந்தோப்பு வஉசி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் கோபி (29). இவர் தனது அம்மா மேனகா, மனைவி ராஜலட்சுமி, தம்பி விஜய், தம்பியின் மனைவி பிரவீதா ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். அண்ணன், தம்பி இருவரும் அப்பகுதியில் சொந்தமாக மளிகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்குச் சொந்த ஊர் மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி பகுதி. நேற்று காலை மளிகை கடையை திறக்க, கோபி ஷட்டரை தூக்கியபோது அதில் மின்சார வயர் பட்டு, மின்கசிவு ஏற்பட்டு இருந்ததால், மின்சாரம் பாய்ந்து கோபி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸில் வந்த ஊழியர்கள், கோபியை பரிசோதனை செய்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற புளியந்தோப்பு போலீசார், கோபியின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் பெட்டிகளில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுக்கப்படுகிறது. இந்த வயர் கடைமீது செல்வதால், அதில் மின்கசிவு ஏற்பட்டு கோபி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் புளியந்தோப்பு, வஉசி நகர் உள்ளிட்ட பல இடங்களில் இதுபோன்று மின் பெட்டிகளில் இருந்து வீடுகளுக்கு வயர் மூலம் மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பலமுறை மின்வாரிய ஊழியர்களிடம் இதுகுறித்து புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து புளியந்தோப்பு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

டி-20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றில் மே.இ.தீவு அணி தகுதி

இன்று உலக கொழுப்பு கல்லீரல் நோய் தினம்; கொழுப்பு கல்லீரல் நோய் தாக்கம் அதிகரிப்பு: குணப்படுத்த செய்ய வேண்டியது என்ன?.. டாக்டர்கள் விளக்கம்

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு