`சுமார் 100 ஆண்டு கனவு நனவானது…’ பீஞ்சமந்தை மலைப்பாதையில் 6 கிலோ மீட்டர் சாலை வசதி: அமைச்சர்கள் திறந்துவைத்து ரூ10.03 கோடி நல உதவி வழங்கினர்

 

ஒடுகத்தூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு உட்பட்டு சுமார் 70க்கும் மேற்பட்ட குக் கிராமங்கள் உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 100 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். முத்துக்குமரன் மலை முதல் பீஞ்சமந்தை வரை தார் சாலை அமைக்க கோரிக்கை விடுத்தனர். மேலும், சாலை, மருத்துவ வசதி இல்லாததால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், எம்எல்ஏ நந்தகுமார் இதுபற்றி சட்டமன்றத்தில் பலமுறை பேசி ₹5.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டு முத்துகுமரன் முதல் பீஞ்சமந்தை வரை சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய தார் சாலை தற்போது அமைக்கப்பட்டது. அதன்படி, புதிய தார் சாலை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பீஞ்சமந்தை ஊராட்சியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார், எம்எல்ஏ நந்தகுமார் முன்னிலை வகித்தார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு அனைவரையும் வரவேற்று பேசினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய தார் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பேசினர். அப்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: பீஞ்சமந்தை மலைக்கு தார் சாலை அமைக்க வேண்டும் சட்டமன்றத்தில் எம்எல்ஏ நந்தகுமார் பேசாத நாளே கிடையாது. காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் சாதிக்க முடியாததை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தார் சாலை அமைத்து சாதனை படைத்துள்ளார்.

பீஞ்சமந்தையில் கூடிய விரைவில் துணை மின்நிலையம், பேருந்து வசதி, செல்போன் டவர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். அதேபோல், அணையே இல்லாத அணைக்கட்டு பகுதியில் விரைவில் அணை கட்டி தரப்படும் என்றார்.  தொடர்ந்து நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தமிழ்நாடு முதல்வரால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை. உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது: மலை கிராமத்திற்கு 8 வருடமாக போராடி பெற்ற சாலை இது. மலை கிராமத்தில் இது எனது முதல் சாலை திறப்பு விழாவாகும். மலை கிராமங்களுக்கு தார் சாலை அமைப்பது சற்று சவாலானது. இதுபோன்ற தரமான சாலை அமைத்து கொடுத்த எம்எல்ஏ நந்தகுமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

எம்எல்ஏ நந்தகுமார் பேசியதாவது: தற்போது பீஞ்சமந்தைக்கு எப்படி சாலை வசதி செய்து தரப்பட்டு உள்ளதோ அதேபோல் பலாம்பட்டு, தெள்ளை, ஜார்தான்கொல்லை போன்ற கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், 3 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 64 குக் கிராமங்கள் இணைக்கும் வகையில் சாலை வசதிகள் செய்து தர வேண்டும். அதேபோல், மழை காலத்தில் காட்டில் உள்ள மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விடுகிறது. இதனால், ஒரு வாரத்திற்கு மேலாக பொதுமக்கள் மின்சாரமின்றி இருட்டில் தவிக்கின்றனர். பீஞ்சமந்தையில் ஒரு துணை மின்நிலையம், செல்போன் டவர், பஸ் வசதி போன்றவை செய்துதர வேண்டும். அணையே இல்லாத அணைக்கட்டு பகுதியில் உள்ள மேலரசம்பட்டில் அணை கட்டிதர வேண்டும். ஏலகிரியில் நடக்கும் கோடை விழா போல் பீஞ்சமந்தையிலும் கோடை விழா நடத்தவேண்டும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, ஆட்டு கொட்டகை, மாட்டு கொட்டகை, தனிநபர் கிணறு, பயிர் கடன், சலவை பெட்டி, மருத்துவ காப்பீடு என 794 பயனாளிகளுக்கு ₹10 கோடியே, 3 லட்சத்து, 85 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

பின்னர் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட குடிகம், குப்சூர், சின்ன எட்டிபட்டு, முள்வாடி, நெக்கினி ஆகிய கிராமங்களில் புதிய அங்கன்வாடி மையங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மண்டல வன பாதுகாவலர்கள் சுஜாதா(வேலூர்), ராகுல்(தர்மபுரி வட்டம்), எம்எல்ஏ கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, ஆர்டிஓ கவிதா, ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், துணை தலைவர் சித்ரா குமரபாண்டியன், தாசில்தார் வேண்டா, பிடிஓக்கள் சுதாகரன், சாந்தி, அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ஆனந்தன் மற்றும் அணைக்கட்டு ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் வருவாய் துறையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்