வில்லிவாக்கம் பகுதியில் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது: கூட்டாளிகளுக்கு வலை

அம்பத்தூர்: மது அருந்த பணம் தராததால் கல்லால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். வில்லிவாக்கம் மூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30), கூலி தொழிலாளி. இவரது தம்பி பிரபாகரன் (27), தனியார் நிறுவன ஊழியர். மணிகண்டனுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் கூட்டுக் குடும்பமாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், வீடு சிறியதாக இருந்ததால் அருகில் உள்ள திருமலை நகரில் மணிகண்டன் வேறு வீடு பார்த்து, அந்த வீட்டிற்கு மாறி செல்ல இருந்தார். இதற்காக கடந்த 1ம் தேதி இரவு மணிகண்டன், தனது தம்பியுடன் சேர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளார்.

மூர்த்தி தெருவில் இருந்து திருமலை தெரு வழியாக சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த 6 பேர் போதையில், மினி லாரியை வழிமடக்கி மணிகண்டனிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல், மணிகண்டனை சரமாரி தாக்கிவிட்டு அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து தலையில் ஓங்கி அடித்துள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்து தடுக்க வந்த தம்பி பிரபாகரனையும் கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்களை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்த தப்பித்து ஓடிவிட்டது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த ஐ.சி.எப். போலீசார் விரைந்து வந்து, உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர், மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

அதில், ஐசிஎப் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24), அலெக்சாண்டர் (24) மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த ஹரிஹரன் (26) உள்ளிட்ட 6 பேர் மணிகண்டனை அடித்து கொன்றது தெரிந்தது. மேற்கண்ட மூவரையும் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு