20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் பில்லூர் – சேந்தனூர் இடையே ரூ.8.38 கோடியில் உயர்மட்ட மேம்பாலம்

*லட்சுமணன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

விழுப்புரம் : விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி பில்லூர் – சேந்தனூர் இடையே ரூ.8.38 கோடியில் உயர் மட்ட மேம்பாலத்திற்கு லட்சுமணன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.விழுப்புரம் அருகே பில்லூரில் இருந்து சேந்தனூருக்கு செல்லும் வழியில் தரைப்பாலம் உள்ளது. மழைகாலங்களில் இந்த மலட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதனால் பில்லூர்- சேந்தனூர் இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கி அரசமங்கலம் குச்சிபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பண்ருட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும்.

பல ஆண்டுகளாக உள்ள இந்த பிரச்னைக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், நான் முதல்வன் திட்டத்தில், முக்கிய 10 அம்ச கோரிக்கையில் இந்த உயர்மட்ட பாலம் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி முதலமைச்சருக்கு, ஆட்சியர் மூலம் மனுஅளித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை மூலம் இந்த மேம்பால பணிகள் மேற்கொள்ள ரூ.8,38,63,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து இந்த மேம்பால பணிகள் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக லட்சுமணன் எம்எல்ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பல ஆண்டுகால பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தன், ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, முருகவேல், நிர்வாகிகள் பார்த்தசாரதி, மணிவண்ணன், பழனி, கருணாமூர்த்தி, செல்வி, ஐயப்பன், செல்வகுமார், முருகன், மதிமுக மாநில இலக்கிய அணி நிர்வாகி அன்புகணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஏற்காடு அண்ணா பூங்காவில் உள்ள அலங்காரங்களில் மலர்கள் புதுப்பிப்பு

ஈரோட்டில் துணிகரம் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் 12 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்