2ம் நிலை காவலர்களுக்கான முதல்கட்ட உடற்தகுதி தேர்வில் 259 பேர் தேர்ச்சி வேலூர் உட்பட 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் முதல் நாளில்

வேலூர், பிப்.7: வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்த 2ம்நிலை காவலர்களுக்கான முதல்கட்ட உடற்தகுதி தேர்வில் 259 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3 ஆயிரத்து 552 2ம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறைக்காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 295 மையங்ளகில் நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் தேர்வு எழுதினர். 66 ஆயிரத்து 908 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 98 ஆயிரத்து 226 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 912 பேர் தேர்ச்சி பெற்றனர். இவ்வாறு தேர்ச்சி பெற்ற 2ம் நிலை காவலர்களுக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு 460 பேருக்கு நேற்று நடந்தது. இதில் 362 பேர் கலந்து கொண்டனர். 98 பேர் ஆப்சென்டாகினர். இவர்களில் 259 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு நாளை 8ம் தேதி 2ம் கட்ட உடற்தகுதி தேர்வு நடக்கிறது. அதேபோல் இன்று நேற்று நடந்தது போக மீதமுள்ள 452 பேருக்கு முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு நாளை மறுநாள் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதற்கட்ட உடல்தகுதி தேர்வில் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பும், இதற்காக அழைப்பு கடிதத்துடன், அசல் சான்றிதழ்கள், அதன் நகல்கள் கொண்டு வர விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதை தொடர்ந்து உயரம் மற்றும் மார்பளவும் அளக்கப்பட்டது. இதையடுத்து 1500 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்றவை நடந்தன. முதல்கட்ட உடற்தகுதி தேர்வுக்கு, டிஐஜி சரோஜ்குமார் தாகூர் முன்னிலையில், எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 3 ஏடிஎஸ்பிக்கள், 3 டிஎஸ்பிக்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் 32 எஸ்ஐக்கள் மற்றும் 54 காவலர்கள் என மொத்தம் 93 பேர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் 57 காவல் அமைச்சுப்பணியாளர்கள், வீடியோ கிராபர்கள் மற்றும் விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்கள் 33 பேர் என மொத்தம் 183 பேர் உடற்தகுதி தேர்வுபணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுகளில் அரைக்கால் சட்டை மற்றும் டி-சர்ட் அணிந்து கொண்டு கலந்து கொள்ள விரும்பினால் ஒரே வண்ணம் கொண்ட அரைக்கால் சட்டை மற்றும் எவ்வித எழுத்துக்களும் படங்களும் இல்லாத டி-சர்ட்டை அணிய அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் விண்ணப்பதாரர்கள் எவ்வித பயிற்சி மையத்தின் அடையாளமோ அல்லது சின்னமோ கொண்ட டி-சர்ட் அணிந்து கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்