12 மணி நேர வேலை மசோதா 3 அமைச்சர்கள் முன்னிலையில் இன்று மாலை பேச்சுவார்த்தை: முக்கிய தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்பு

சென்னை: 12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று மாலை 3 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த மசோதாவை திரும்ப பெறக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். இந்நிலையில், வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. சிஐடியூ மற்றும் ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள்கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வரும் 27ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மே 12ம்தேதி தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், 12 மணி நேர வேலை சட்டம் குறித்து தமிழ்நாடு அரசு அளித்துள்ள விளக்கத்தில், ‘‘எந்த ஒரு தொழிற்சாலையாக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும் அங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இது நடைமுறைப்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு விருப்பம் இல்லை என்றால், நிச்சயமாக அரசு பரிசீலனை செய்து ஆய்வு செய்து தான் நடைமுறைப்படுத்தும். வாரத்தில் 48 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இன்னொன்று, எல்லா நிறுவனங்களுக்கும் இந்த சட்டத்திருத்தம் பொருந்தாது. எந்த நிறுவனம், எந்த தொழிற்சாலை விரும்புகிறதோ அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே இது பொருந்தும். 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் மீதி இருக்கிற அந்த மூன்று நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை’’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துகளை அறியவும் அரசு சார்பில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் நடக்கிறது.

இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டு கருத்துகளை கேட்டறிகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கத்தினர் இதில் பங்கேற்கின்றனர்.

Related posts

கோழிக்கோடு அருகே 13 ஜோடி இரட்டையர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி..!!

சென்னை ராயபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து..!!

2வது நாளாக குறைந்த தங்கம் விலை; சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை