108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நம்பி கோயிலில் அன்னதானம் நடத்த அனுமதி

ராதாபுரம், ஏப்.17: திருக்குறுங்குடி நம்பி கோயிலில் பக்தர்களால் வழங்கப்படும் அன்னதானம் நடத்துவதற்கு மீண்டும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்னதான குழுவினரிடம் சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார். தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவுவை நேற்று திருக்குறுங்குடி நம்பி கோயில் அன்னதான குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர்கள் இசக்கியப்பன், சுப்பிரமணியன், சிவகுமார், அருணாசலம், வெங்கடேஷ், எத்திராஜன் ராமானுஜதாசன் ஆகியோர் சந்தித்து அளித்த மனுவில், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகியநம்பிராயர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் சுவாமி நின்ற நம்பி, வீற்றிருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலை நம்பி என ஐந்து நிலைகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதில் மலை நம்பி கோயில் திருக்குறுங்குடி ஊருக்கு மேற்கே சுமார் 10கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வனத்துறையினர் அமைத்துள்ள சோதனைசாவடியில் இருந்து சுமார் 3.5 கிமீ பக்தர்கள் நடந்து செல்லவேண்டும். அல்லது தனியார் ஜீப்களில் தான் செல்ல வேண்டும். இக்கோயிலில் பிரதி தமிழ்மாதம் கடைசி சனிக்கிழமையன்று பல்வேறு மாவட்டம், மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நம்பியாற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

பக்தர்களின் வசதிக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மாத கடைசி சனிக்கிழமையன்று அன்னதான குழு சார்பில் காலை முதல் மதியம் வரை அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கால் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு இருந்ததால் அன்னதானம் திட்டம் செயல்படுத்துவதில் தடைப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அரசும், வனத்துறையும் அனுமதித்தது. ஆனால், பக்தர்களால் வழங்கப்பட்டு வந்த அன்னதான திட்டத்துக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் ஓராண்டுக்கு மேலாகியும் அன்னதானம் திட்டம் செயல்படுத்தாததால் மலைநம்பி கோயிலுக்கு நடந்து வரும் பக்தர்கள், குழந்தைகள், பெரியவர்கள் வரை உணவின்றி சிரமத்திற்குள்ளாகின்றனர்.

எனவே மலைநம்பி கோயிலில் பக்தர்களால் வழங்கப்படும் அன்னதானத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்த மீண்டும் வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட சபாநாயகர் அப்பாவு, வனத்துறை அமைச்சரிடம் எடுத்துக்கூறி அன்னதானத் திட்டத்திற்கு விரைவில் அனுமதி பெற்று தருவதாக அன்னதான குழுவினரிடம் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது திமுக மாவட்ட துணைச்செயலாளர் நம்பி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி, அன்பரசு, சுபாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்