வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம் குடிநீரில் மனிதக்கழிவை கலந்தது ஒரு பெண், 2 ஆண்: சோதனையில் உறுதி; போலீஸ்காரர் உட்பட 2 பேரிடம் ‘வாய்ஸ் டெஸ்ட்’

புதுக்கோட்டை: வேங்கவயலில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்தது ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என்று பகுப்பாய்வு மைய சோதனையில் உறுதியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் 26ம்தேதி மனிதக்கழிவு கலக்கப்பட்டது கண்டறியப்பட்டது. ஏடிஎஸ்பி ரமேஸ் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், வெள்ளனூர் காவல்நிலையத்தில் 85 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, கடந்த ஜனவரி 14ம்தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீசார், 147 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கு இடமாக உள்ள 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். அதே பகுதியை சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை பயிற்சி காவலர் உள்ளிட்ட இரண்டு பேர், வாட்ஸ்அப் குழுவில் இதுதொடர்பாக தகவல் பரிமாற்றம் ஆடியோவாக பதிவு செய்துள்ளனர். அவர்களின் ஆடியோவை உண்மைத்தன்மை கண்டறியும் சோதனைக்காக உட்படுத்தி அவர்களுடைய குரல் மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இதுகுறித்து விசாரித்த நீதிபதி சத்யா, சந்தேகத்திற்கு இடமாக உள்ள 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகளை எடுக்க அனுமதி வழங்கியும், பயிற்சி காவலர் உள்ளிட்ட 2 பேரிடம் சென்னையில் உள்ள பகுப்பாய்வு மையத்தில் குரல் பரிசோதனைக்காக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று காவலர் உட்பட 2 பேரையும் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து சென்று தடயவியல் மையத்தில் குரல் பதிவுகளை பதிவு செய்தனர். இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மனிதக்கழிவு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று பகுப்பாய்வு மைய பரிசோதனை முடிவில் உறுதியாகி உள்ளது. இதுதவிர 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்த பிறகு இவர்களில் யாருடைய மலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலந்தது என்ற விவரம் தெரிய வரும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்