ஸ்மார்ட் சிட்டி திட்டம் கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு

 

கோவை, ஆக. 26: ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில், “ஸ்மார்சிட்டி விருது-2022’’, ஸ்மார்ட்சிட்டி மிஷன் இயக்குனரால் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, `பில்டு என்வைரான்மென்ட்’ பிரிவில் கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் சாலை போன்ற பகுதிகளில் சிறந்த மாதிரி சாலைகள் அமைத்தல், வாலாங்குளம், பெரியகுளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்பட பல்வேறு குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்படுத்துதல் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஒன்றிய அரசு சார்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் 52 நகரங்களில் இருந்து 88 முன்மொழிவுகள் இந்த விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டன. இதில், கோவை மாநகராட்சி அசத்தலாக முதலிடம் பிடித்துள்ளது. மேலும், திட்ட செயல்பாட்டில் சிறந்த ஸ்மார்ட்சிட்டி நகரங்களுக்கான விருதில், இந்தியாவின் தெற்கு மண்டலத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. நகரங்களில் ஸ்மார்ட்சிட்டி திட்ட செயலாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த நகரங்கள், சிறந்த திட்டப்பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட புதுமையான திட்டப்பணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் வரும் செப்டம்பர் 27-ம்தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்த விருதுகளை வழங்குகிறார். ஸ்மார்ட்சிட்டி திட்டங்களை செயல்படுத்தும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற தேர்வில், தமிழ்நாடு, தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. மேற்கண்ட தகவலை கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்