ராமநாதபுரம்,முதுகுளத்தூர் தொகுதிகளில் விளையாட்டு அரங்கு அமைக்க இடம் தேர்வு

ராமநாதபுரம், ஜூலை 9: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அரங்கு அமைந்துள்ளது. இதில் உள்ள நீச்சல் குளம் கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாமல் மூடிக்கிடக்கிறது. இந்நிலையில் நீச்சல் குளம், இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் கூறியதாவது, மாவட்ட விளையாட்டு அரங்கில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் ரூ.7.5 லட்சம் செலவிலும், நீச்சல் குளம் ரூ.9.5 லட்சம் செலவிலும், ரூ.8 லட்சம் செலவில் இந்த வளாகத்தில் கழிப்பறைகள், ரூ.10 லட்சம் செலவில் மாவட்ட விளையாட்டு அலுவலக வளாகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், கழிப்பறை வசதிகள்,பெண்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட பராமரிப்பு பணிகளும், ரூ. 2.5 லட்சம் செலவில் நீச்சல்குளம் உள்ளிட்ட இடங்களில் நீரேற்று வசதிகளும் என ரூ.37.5 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

இந்தாண்டு தமிழகத்தில் 10 தொகுதிகளில் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தொகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கும், பரமக்குடி தொகுதியில் பரமக்குடியில் மினி விளையாட்டு அரங்கும் அமைந்துள்ளது. அதனால் விளையாட்டு அரங்குகளே இல்லாத தொகுதிகளில் முதற்கட்டமாக மினி விளையாட்டு அரங்குகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மினி விளையாட்டு அரங்கிற்காக முதுகுளத்தூர் தொகுதியில் பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதான வளாகத்திலும், ராமநாதபுரம் தொகுதியில் பெரியபட்டினத்தில் காரான் விலக்கு அருகேயும் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்