மான்கள் ஊருக்குள் வருவதை தடுக்க தண்ணீர் வசதி செய்து தரவேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சிவகங்கை, ஏப்.16: சிவகங்கை மாவட்டத்தில் பனங்குடி, சாத்தரசன்பட்டி, மண்மலை, சங்கரபதிகாடு, கல்லல், உடையப்பனேந்தல், வேலங்குடி, மணச்சை, கோவிலூர், காளையார்கோவில், அரண்மனைசிறுவயல், பாகனேரி, மதகுபட்டி பகுதிகளில் புதர்மண்டிய காடுகளில் சுமார் 20ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. பெரிய மரங்களாக இல்லாமல் புதர்களாக காணப்படும் செடிகள் பல மீட்டர் நீள அகலம் கொண்டதாக உள்ளன. இது விலங்குகள் மறைந்து கொள்வதற்கு வசதியாக இருப்பதால் இப்பகுதியில் மான்கள் அதிகம் கானப்படும்.வேறு விலங்குகளை இதுவரையில் யாரும் பார்த்ததாக ஆதாரம் இல்லை. இங்கு காணப்படும் மான்களை பாதுகாப்பதற்கு மற்ற வனப்பகுதியில் உள்ளது போன்ற வசதிகள் மிகவும் குறைவான அளவிலேயே செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழையின்றி வறட்சி நிலவியதாலும், காடுகளில் தண்ணீர் மற்றும் மான்களுக்கு தேவையான உணவு கிடைக்காததால் மான்கள் காடுகளைவிட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வருகின்றன.

இவ்வாறு காடுகளைவிட்டு வெளியேறி சாலைகளை கடக்கும் போது வாகனங்களில் அடிபடுவது, நாய்கள் கடித்து பாதிப்படைவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் வாகனத்தில் அடிபடுவது, நாய்கள் கடிப்பது உள்ளிட்ட காரணங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்து வருகின்றன. எனவே மான்கள் நீர் மற்றும் உணவிற்காக காடுகளை விட்டு வெளியேறாத வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது, ‘இரவு நேரங்களிலேயே மான்கள் காடுகளை விட்டு வெளியேறுகின்றன. இதனால் விபத்துகள் மற்றும் நாய்களினால் கடுமையாக பாதிக்கப்படுவது, இறப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது. மான்கள் காடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க குறைவான அளவிலேயே குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

கூடுதல் தொட்டிகள் கட்டவும், அவைகளுக்கு உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.வன அலுவலர் ஒருவர் கூறியதாவது,‘மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் மான்களுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்புபோல் மான்களை கொல்வது தற்போது இல்லை. ஆனால் அவைகளை காக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மான்கள் இருக்கும் காட்டுப்பகுதிகளில் ஏராளமான சிறிய தொட்டிகள் அமைத்து போர் மூலம் தண்ணீர் வசதி செய்து தரவேண்டும். மேலும் கூடுதலான பணியாளர்களை நியமித்தால் மட்டுமே அவைகளை முழுமையாக காக்க முடியும் என்றார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்