மண்மங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்

கரூர், ஜூன்25: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்மங்கலம் வட்டக்குழுவின் 6வது வட்ட குழு பேரவைக் கூட்டம் வெண்ணைமலையில் நடைபெற்றது. இதில் மண்மங்கலத்தில் அரசுகலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. கூட்டத்திற்கு வட்டத்தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வட்ட துணைச் செயலாளர் புகழேந்தி வரவேற்றார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் பேரவை கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். வட்டச் செயலாளர் கோபி வேலை அறிக்கை, வரவு செலவு அறிக்கை குறித்து பேசினார். தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பொன் ஜெயராம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாவட்ட தலைவர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் சூழலில், ஆயிரக்கணக்கான விபத்துக்கள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்த பகுதியில் உடனடியாக மேம்பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும். மண்மங்கலம், புகளூர் தாலுக்காக்களை மையமாக கொண்டு மண்மங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, மாணவ, மாணவிகளை தங்களது உயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இலவசமாக நீச்சல் கற்றுக் கொள்ள மண்மங்கலம் பகுதியில் மாவட்ட அளவில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும்.

மண்மங்கலம் பகுதியில பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளது. போதிய அளவிற்கு சிக்னல் கிடைக்காமல் உள்ளதால், அலைபேசி சிக்னல் இந்த பகுதியில் அமைக்க வேண்டும். பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்