மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை நீதி கிடைப்பதில் தாமதம்: சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

கேவடியா: அனைத்து மாநில சட்ட அமைச்சர்களின் 2 நாள் மாநாடு குஜராத்தில் நேற்று தொடங்கியது. இதில் பேசிய பிரதமர் மோடி, ‘நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில், நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் ஒன்றாகும்,’ என கவலை தெரிவித்தார். குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை அருகே உள்ள கேவடியாவின் ஏக்தா நகரில், அனைத்து மாநில சட்ட அமைச்சர்கள், சட்ட செயலாளர்களுக்கான 2 நாள் அகில இந்திய மாநாடு நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு, 1,500.க்கும் மேற்பட்ட பழைய, காலாவதியான மற்றும் பொருத்தமற்ற சட்டங்களை ரத்து செய்துள்ளது.  இவை ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அமலில் இருந்தவை. நாட்டு மக்கள் தற்போது சந்தித்து வரும் முக்கிய சவால்கள் பல உள்ளன. அவற்றில், நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதும் ஒன்றாகும். இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக நீதித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.சட்டங்கள் தெளிவாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும். சட்டத்தின் தெளிவின்மை சிக்கலை உருவாக்குகிறது. சட்டம் சமானியருக்கும் புரியும் போது, அது வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களுக்கு சட்ட மொழி ஒரு தடையாக மாறாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, எங்களுக்கு ஆதரவு தேவை. ஒவ்வொரு மாநிலமும் இதனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இளைஞர்களுக்கு தாய் மொழியில் சட்டக் கல்வியை உருவாக்க வேண்டும். நீதி வழங்கப்படுவதை காணும்போது, ​​அரசியலமைப்பு  அமைப்புகளின் மீதான  நாட்டு மக்களின் நம்பிக்கை வலு பெறும். மேலும், நீதி வழங்கப்படும் போது  சாமானியர்களின் நம்பிக்கையும் உயரும். சட்ட மொழி குடிமக்களுக்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது. அரசாங்கம்,  நாடாளுமன்றம், நமது நீதிமன்றங்கள் என மூன்றுமே ஒரு வகையில் ஒரே தாயின்  பிள்ளைகள்தான். எனவே, செயல்பாடுகள் வேறுபட்டாலும், அரசியலமைப்பின் உணர்வைப்  பார்த்தால், வாக்குவாதத்திற்கோ போட்டிக்கோ இடமில்லை. இ-கோர்ட்  இயக்கம் நாட்டில் வேகமாக முன்னேறி வருகிறது. மெய்நிகர் விசாரணை மற்றும்  உற்பத்தி போன்ற அமைப்புகள் நமது சட்ட அமைப்பின் ஒரு பகுதியாக மாறி விட்டன.  வழக்குகளை மின்-தாக்கல் செய்வதும் ஊக்குவிக்கப்படுகிறது. நாட்டில் 5ஜி  வருகையுடன், இத்தகைய அமைப்புகள் வேகம் பெறும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ச்சி பாதையில் பயணிக்கும்போது, உள்சீர்திருத்தங்களையும் மேற்கொண்டது தான் இந்திய சமூகத்தின் சிறப்பு அம்சம்.  காலாவதியான சட்டங்கள், மோசமான பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள் ஒரே மாதிரியாக மாறினால், அவை நம்  முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும். இதை நாம் அறிந்திருப்பதால் தான், நமது சமூகம் தானாக முன்வந்து அவற்றை அகற்றியது. இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில் இன்ஜின் டிரைவர்கள்: ரயில்வே வாரியம் ஆலோசனை