மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 4 ஆயிரம் மனுக்கள்

ராசிபுரம், டிச.30: நாமக்கல் மாவட்டத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில், 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார் எம்பி கூறினார். ராசிபுரம் அருகே, அத்தனூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இதனை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொதுமக்கள் அரசாங்கத்தை தேடி வந்த காலம் போய், தற்போது மக்களை தேடி அரசாங்கம் வரும் திட்டமாக, மக்கள் குறைகளுக்கு விரைவில் தீர்வு காணும் திட்டமாக, மக்களுடன் முதல்வர் திட்டம் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட கிராம பகுதிகள் உட்பட 39 இடங்களில் நடைபெற்ற முகாம்களில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் தகுதி உள்ள மனுக்களுக்கு அங்கேயே சேவைகள், ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

முகாமில் 13 துறைகள் சேர்ந்த அதிகாரிகள் அமர்ந்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணுகின்றனர். மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது, 30 நாட்களில் தீர்வு காண வேண்டுமென முதல்வர் கூறியுள்ளார். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில், இன்று(29ம் தேதி) கடைசியாக அத்தனூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இம்முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இவ்வாறு ராஜேஷ்குமார் எம்பி கூறினார். பேட்டியின் போது, திமுக ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி செயலாளர் கண்ணன், பேரூராட்சி தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை