மகா சிவராத்திரி எதிரொலி பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பேருந்துகள்

தேனி, மார்ச் 9: மாசி மகா சிவராத்திரியையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களில் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் பேருந்துகளில் முண்டியடித்து ஏறி பயணித்தனர். மாசி மகா சிவராத்திரி நேற்று அனுசரிக்கப்பட்டது. சைவ கோயில்களில் மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாட்டுக்கும் உகந்த நாளாக மாசி மகாசிவராத்திரி கருதப்படுகிறது.

இதனால் இந்த நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களும் தங்களது குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி நேற்றிரவு மகா சிவராத்திரி அனுசரிக்கப்பட்ட நிலையில் காலையில் இருந்தே தேனி மாவட்டத்தில் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தேனியில் இருந்து மதுரை , திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை நோக்கி செல்லக்கூடிய பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அதிகப்படியான பயணிகள் கூடியதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் தேனி புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் வெளியூர்களில் உள்ள குலதெய்வ கோயில்களுக்கு செல்வதற்காகவும் கோயில்களில் வழிபாடு நடத்திய பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பக்கூடிய பக்தர்களும் பஸ் நிலையத்தில் கூடியதால் தேனி புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பேருந்து நுழையும் முன்னரே முண்டியடித்து இடம்பிடித்து ஏறிச் சென்றனர். கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தால் பலர் குடும்பத்தினருடன் காத்திருந்து பஸ்களில் ஏறிச் சென்றனர்.இதனால் நேற்று அதிகாலை தொடங்கி இரவு முழுவதும் தேனி மாவட்ட பேருந்து நிலையங்கள் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டன.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு