புதுக்கோட்டையில் பாஜவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பாஜவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராகுல்காந்தியை ராவணனை போல சித்தரித்து சமூக ஊடகங்களில் படங்களை வெளியிட்டு வரும் பாஜவை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட பாஜ அலுவலகம் முன்பு நேற்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் முருகேசன் (வடக்கு), ராமசுப்புராம் (தெற்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். கரூர் எம்பி ஜோதிமணி கலந்து கொண்டு பேசினார். பாஜ அலுவலகம் செல்லும் சாலையில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். சிறிதுநேரம் போலீசாருடன் வாக்குவாதத்துக்கு பிறகு, அந்த இடத்திலேயே பாஜகவினரை எதிர்த்து காங்கிரசார் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர். மாநில பொதுச்செயலர் பெனட் அந்தோனிராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை திவியநாதன், சிறுபான்மையினர் பிரிவு மாநிலத்துணை தலைவர் இப்ராஹிம்பாபு, முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஜி.எஸ். தனபதி, வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்