புதுகை, பரம்பூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

புதுக்கோட்டை, மே 5: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை நகர கிளையின் சார்பாக மழைத் தொழுகை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் பெரும்பாளான குளங்களில் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது, வீடுகளில் உள்ள போர்களிலும் தண்ணீர் குறைந்து விட்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இது போன்ற காலகட்டத்தில் நபிகள் நாயகம் காட்டித் தந்தபடி மழை இல்லாத காலங்களில் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். அவர்களைப் பின்பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை நகர கிளையின் சார்பாக நிஜாம் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று காலை மழைவேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் கிளை தலைவர் பீர் முகம்மது, செயலாளர் முகம்மது ஆசிப், பொருளாளர் சையது மசூது மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பரம்பூர்: தமிழ்நாடு முழுவதும் மழை பொழிவு இல்லாமல் வறண்ட நிலை காணப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிப்பு அடைவதோடு நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி வறண்ட நிலை காணப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ் துளை கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து தண்ணீர் வற்றும் சூழ்நிலைக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மாறி உள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இக்காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த அடிப்படையில் மழை இல்லாத காலங்களில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். அந்த வகையில், பரம்பூர் ஜமாஅத் மற்றும் பெரிய கண்மாய் ஆயகட்டுதாரர்கள் சார்பாக இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள், சிறுவர்கள், முதியவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்