பிளஸ்-1 தேர்வில் 93.15 சதவீதம் தேர்ச்சி

 

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு பிளஸ் 1 தேர்வெழுதிய 93.15 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சேலம் மாவட்டத்தில், சிஇஓ கபீர் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, நடப்பாண்டு 232 பள்ளிகளைச் சேர்ந்த 35,616 பேர் பிளஸ் 1 தேர்வெழுதினர். இதில், மாணவர்கள் 16,429 பேரும், மாணவிகள் 19,187 பேரும் அடங்குவர். இவர்களில், 14,729 மாணவர்கள், 18,449 மாணவிகள் என மொத்தம் 33,178 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 93.15 ஆகும். கடந்த ஆண்டைவிட 4.53 சதவீத பேர் நடப்பாண்டு கூடுதலாக தேர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்வு எழுதியவர்களில் 89.65 சதவீத மாணவர்களும், 96.15 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் 8 அரசுப்பள்ளிகள், 4 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 69 தனியார் பள்ளிகள் என மொத்தம் 81 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பாடவாரியாக மாவட்டத்தில் மொத்தம் 123 மாணவர்கள், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதன்படி, தமிழில் 6, ஆங்கிலம், வேதியியல், வேளாண் அறிவியலில் தலா 2 பேர், இயற்பியலில் 16 பேர், உயிரியல், விலங்கியல், வேலைவாய்ப்பு திறன்கள் பாடங்களில் தலா 3 பேர், கணினி அறிவியலில் 25 பேர், கணினி பயன்பாடுகளில் 13 பேர், வணிகவியலில் 9 பேர், கணக்கு பதிவியலில் 35 பேர், வணிகக்கணிதத்தில் 4 பேர் சென்டம் எடுத்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்