பாளையில்தந்தை, மகனை அரிவாளால்வெட்டிய வாலிபருக்கு வலை

நெல்லை, ஏப். 5:பாளை ஐகிரவுண்டு அண்ணாநகர் அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் கிட்டு என்ற கிருஷ்ணன் (50). விவசாயி. இவரது மகன் தாணு (18) அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் சண்முகத்தாய். இவரும் கிட்டு என்ற கிருஷ்ணனும் உறவினர்கள். இவர்களுக்குள் பணம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சண்முகத்தாயின் மருமகனான தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் வெள்ளூரைச் சேர்ந்த தோல் முட்டைக்குமார் (28) என்பவர் சண்முகத்தாயின் வீட்டுக்கு நேற்று வந்தார். அப்போது இந்த பிரச்னை குறித்து சண்முகத்தாய் தனது மருமகனிடம் கூறினார். இதனால் தோல்முட்டைக்குமார் ஆத்திரம் அடைந்து கிட்டு என்ற கிருஷ்ணன், அவரின் மகன் தாணு ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார்.

இதில் காயமடைந்த தந்தை, மகனை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து பாளை ஐகிரவுண்ட் காவல் நிலையத்தில் கிட்டு என்ற கிருஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் தப்பிச்சென்ற தோல் முட்டைக்குமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். தோல் முட்டைக்குமார் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்