பாஜ அரசை கண்டு பயம் மோடி பிரதமரான பிறகு பெரிய தீவிரவாத தாக்குதல் நடக்கவில்லை: ராஜ்நாத் சிங் பெருமிதம்

கெவடியா: `மோடி பிரதமரான பிறகு நாட்டில் பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதல் நடைபெறவில்லை,’ என்று ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தெரிவித்தார். குஜராத்தில் நடைபெறும் மாநில பாஜ உயர் மட்ட குழு கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், இறுதி நாளான நேற்று நர்மதா மாவட்டத்தின் கெவடியாவில் நடந்த பாஜ கூட்டத்தில் அவர் பேசியதாவது: தீவிரவாதிகள் வெற்றி பெற ஒருபோதும் ஒன்றிய அரசு அனுமதிக்காது. ஜம்மு காஷ்மீரை விட்டு விடுங்கள். பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு மோடி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை நாட்டில் மிகப்பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. மத்தியில் இதற்கு முன் பல கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன. ஆனால், பாஜ தலைமையிலான அரசை கண்டு தீவிரவாதிகள் பயப்படுகின்றனர். தங்களின் புகலிடத்தில் கூட பாதுகாப்பில்லை என்பதை அவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததன் மூலம் தேவைப்பட்டால் எல்லை கடந்து அவர்களின் இருப்பிடத்தில் கூட இந்தியாவால் தாக்குதல் நடத்த முடியும் என்பது உலகிற்கு உணர்த்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.* ராணுவம் மீது அக்கறைராஜ்நாத் சிங் மேலும் கூறுகையில், “ராணுவ வீரர்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், 40 ஆண்டு காலமாக  அவர்கள் விடுத்த ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத் கோரிக்கையை காங்கிரஸ்  நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால், மோடி அரசு இதை உடனடியாக செயல்படுத்தியது. இது காங்கிரஸ் அரசுக்கும் பாஜ அரசுக்கும் இடையேயான வேறுபாட்டை காட்டுகிறது,’’ என்றார்….

Related posts

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு

வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம்