பஸ் வசதி கேட்டு கலெக்டர் ஆபிசில் குவிந்த மாணவர்கள்

நாமக்கல், அக்.10: பரமத்திவேலூர் தாலுகா, பெரிய சோளிபாளையம் ஊராட்சி, குமாரசாமிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். பின்னர், தங்களது பெற்றோருடன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், குமாரசாமிபாளையம் கிராமத்தில் போதிய பஸ் வசதி இன்றி சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் பஸ்வசதி இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, எங்கள் பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இதேபோல், சேந்தமங்கலம் மாவிலர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், சேந்தமங்கலத்தில் பெரிய மாரியம்மன் கோயில் விழாவின்போது, காப்புகட்டும் நாளன்று மாவிலர் தெருவில் இருந்து சுவாமி அலங்காரம் அமைத்தும், பூ எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று கோயிலில் பூ போடும் நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த வழிபாட்டினை 20 ஆண்டுக்கு மேலாக எங்கள் சமூகத்தினர் செய்து வருகிறார்கள். இதற்கு மற்றொரு தரப்பினர் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே, திருவிழாவின் போது, முதல் காப்பு கட்டும் நாளில், சுவாமிக்கு பூ போடும் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்த, எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்