நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு; தோட்டத்தில் முக்கிய தடயம் சிக்கியது: அங்குலம் அங்குலமாக சோதனை செய்த போலீஸ்


நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது சடலம் கிடந்த தோட்டத்தை அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனை செய்தனர். இதில் முக்கிய தடயம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங்(60). இவர், கட்டுமானம் மற்றும் ஒப்பந்தப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 2ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், 4ம் தேதி அவருடைய தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவ்வழக்கில் நெல்லை எஸ்பி சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் ஜெயக்குமார் எழுதி வைத்திருந்திருந்த மரண வாக்குமூலம் என 2 கடிதங்களின் அடிப்படையில் 70க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். கூலிப்படைகளின் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயக்குமாரின் இரு செல்போன்களுக்கு வந்த கால் லிஸ்ட் மூலம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் தனிப்படைகளின் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் போலீசார் பல்வேறு கோணங்களில் கடந்த 9 நாட்களாக விசாரணை நடத்திய போதிலும், கொலை வழக்கை உறுதிப்படுத்துவதற்காக ஆதாரங்கள் கிடைக்காதது விசாரணையில் தொய்வை ஏற்படுத்தியது. எவ்வித ஆதாரங்களும் சிக்கவில்லை என போலீசார் திணறி வந்த நிலையில், அவரது மகன்கள், நண்பர்களிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த சூழலில், இறந்தது தனது கணவர் இல்லை என்றும், டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் ஜெயக்குமாரின் மனைவி கோரிக்கை விடுத்தார். இதன் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் நெல்லை மாவட்ட தடயவியல் நிபுணர்கள் சேகரித்த அறிக்கை விவரங்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை.

மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள தடயவியல் நிபுணர்கள் சேகரித்த தடயங்களின் அறிக்கை கிடைக்க சில நாட்கள் ஆகும் நிலையும் உள்ளது. தோட்டத்து கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட கத்தி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கத்தி புதியதா? அல்லது பழையதா என்பது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார், ஜெயக்குமார் சடலமாக கிடந்த தோட்டத்தை அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டு நேற்று மாலை ஆய்வு செய்தனர். சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது. மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட் களின் உதவியுடன் தோட்டத்தில் தடயங்கள் எதுவும் புதைத்து வைக்கப்பட்டு உள்ளதா என தேடினர். இதில் முக்கிய தடயம் ஒன்று சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தடயம் மூலம் வழக்கு அடுத்த கட்டத்துக்கு நகருமென போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

‘விரைவில் பிடிப்போம்’
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஜெயக்குமார் கொலை வழக்கு விசாரணையில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை. காவல்துறை சுதந்திரமாகவும், துரிதமாகவும் விசாரித்து வருகிறது. சில வழக்குகளில் குற்றவாளிகள் விரைவில் சிக்கிவிடுவர். சில வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபட நாளாகும். இதுபோன்று பல சம்பவங்களில் 300 நாட்களுக்கு மேல் ஆன பின்னர் குற்றவாளிகள் சிக்கியுள்ளனர். இருப்பினும் இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர். காவல்துறை உயரதிகாரிகள் மேற்பார்வையில் தான் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. எஸ்பி தலைமையில் பல அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதிகளை சுற்றிலும் விசாரணையில் இருந்து வருகின்றனர். வழக்கு விசாரணை நடந்து வருவதால் தற்போது ஒன்றும் சொல்ல முடியாது’ என தெரிவித்தார்.

ஜெயக்குமார் மரணமும்… சிபிசிஐடி சந்தேகமும்…
திருச்சியில் நடந்த ராமஜெயம் கொலைக்கும், ஜெயக்குமார் மரண வழக்கிலும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகம் எழுப்புகின்றனர். ராமஜெயம் போல் ஜெயக்குமாரும் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம். ராமஜெயம் வாயில் துணி வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். ஜெயக்குமார் வாயில் பாத்திரம் கழுவும் கம்பி பிரஸ் திணிக்கப்பட்டிருந்தது. இருவரது கை, கால்களும் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரில் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில், ராமஜெயத்தின் உடலும் கொலை செய்யப்பட்டு சில பாகங்கள் எரிந்து இருந்ததால் அவரும் கொலை செய்யப்பட்டு எரிக்க முயற்சி நடந்திருக்கலாம் என சிபிசிஐடி போலீசார் சந்தேகிப்பதாக தெரிவித்து உள்ளனர். இருவரது மரணத்திலும் கூலிப்படையினர் ஈடுபட்டிருக்கலாம் எனவும், ஜெயக்குமார் வழக்கில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அதன் மூலம் ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை எளிதில் கண்டறியலாம் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடுகிறது ஒன்றிய அமைச்சரவை

தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு