நாமக்கல் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு கார் அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

நாமக்கல் மே 14: நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு, புதிய கார்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.நாமக்கல் மாவட்டத்தில், 13 ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் பயன்பாட்டுக்காக, 13 ஸ்கார்பியோ கார்களை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், தங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்கும் வகையில், 2008ம் ஆண்டு, தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, அரசு சார்பில் கார்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு தமிழக அரசால், மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களுக்கும், புதிய வாகனங்கள் வழங்கப்படும் என, கடந்த மாதம், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி முதற்கட்டமாக, ₹25 கோடியே 40 லட்சம் மதிப்பில், 200 புதிய ஸ்கார்பியோ கார்கள், தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக வழங்குவதற்கு அடையாளமாக, கடந்த 10ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர், 12 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், பள்ளிபாளையம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு மற்றும் வெண்ணந்தூர் ஆகிய 13 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு கார் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ₹1.59 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட, 13 கார்களை, ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேலு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்