நாகர்கோவில் அருகே கல்லால் தாக்கி கொத்தனார் கொலை? நடுரோட்டில் சடலமாக கிடந்தார்

சுசீந்திரம் :  நாகர்கோவில் அருகே கொத்தனார் நடுரோட்டில் சடலமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக மகன் அளித்த புகாரின் பேரில் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் அருகே உள்ள புல்லுவிளையை சேர்ந்தவர் ராஜதுரை (50). கொத்தனார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ராஜதுரை, தனது மனைவி மற்றும் மகன்களுடன், மேலகிருஷ்ணன்புதூரில் 18 ஆண்டுகளாக வசித்து வந்தார். கடந்த 4 வருடங்களுக்கு முன் தான், தனது சொந்த ஊரான புல்லுவிளையில்  வீடு கட்டி குடியேறினார். இருப்பினும் அவ்வப்போது, மேலகிருஷ்ணன்புதூரில் உள்ள தனது நண்பர்களை சந்திக்க வந்து செல்வது வழக்கம். அதே போல் நேற்று முன் தினம் இரவு, மேலகிருஷ்ணன்புதூர் வந்த ராஜதுரை பின்னர் வீடு திரும்ப வில்லை. இந்த நிலையில் நேற்று காலை மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பு அருகே உள்ள தெருவில், ராஜதுரை இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பீர் பாட்டில், செங்கற்கள் உடைந்து கிடந்தன. இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, ராஜதுரை உடலை  பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜதுரை உடலில் தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயங்கள் உள்ளன. எனவே அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ராஜதுரை மகன் அளித்த புகாரின் பேரில் தற்போது மர்மசாவு என வழக்கு பதிவு செய்து சுசீந்திரம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். ராஜதுரைக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்தது. பீர் பாட்டில் உடைந்து கிடப்பதால், போதையில் ஏற்பட்ட தகராறில் ராஜதுரை கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. கர்நாடக மாநிலத்துக்கு கட்டிட வேலைக்கு சென்றிருந்த ராஜதுரை, கடந்த இரு நாட்களுக்கு முன் தான் ஊர் திரும்பினார். நேற்று முன் தினம் இரவில் மேலகிருஷ்ணன்புதூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு 11 மணி வரை அங்கிருந்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். எனவே அதன் பின்னர் தான் ராஜதுரை கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என உறவினர்கள் கூறி உள்ளனர். சம்பவ பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.பைக்கில் வந்த மர்ம நபர் யார்? ராஜதுரை சடலமாக கிடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ஒரு கேமராவில், ராஜதுரை அந்த வழியாக நடந்து செல்லும் காட்சி உள்ளது. அப்போது அந்த வழியாக பைக்கில் செல்லும் நபர், மற்றொருவரிடம் தகராறு செய்கிறார். அந்த சமயத்தில் அங்கு செல்லும் ராஜதுரை, பைக்கில் உள்ள நபரை கண்டித்து அவரது பைக்கில் இருந்த சாவியை வேகமாக பறித்துக் கொண்டு செல்கிறார். அந்த நபர் பைக்கை நிறுத்தி விட்டு வேகமாக ராஜதுரையை துரத்திக் ெகாண்டு ஓடுகிறார். சிறிது நேரத்தில் பதற்றத்துடன் வரும் அந்த நபர், சாவி இல்லாமல் பைக்கை தள்ளிக்கொண்டு வேகமாக செல்கிறார். எனவே அந்த நபர் தான், ராஜதுரையை கல்லால் தாக்கி இருக்க வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது. அந்த நபர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்….

Related posts

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது

கோவையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம் தொழிலதிபரிடம் ஹவாலா பணமா? காரை மறித்து கொள்ளை முயற்சி: ஆயுதங்களுடன் தாக்கிய ராணுவ வீரர் உட்பட 4 பேரிடம் விசாரணை