தூத்துக்குடியில் மகளிர் தின விழா

 

தூத்துக்குடி, மார்ச் 11: பெண்ணுரிமை பாதுகாக்கும் இயக்கமாக திமுக செயல்படுவதாக தூத்துக்குடியில் மகளிர் சமூக நல அமைப்பின் சார்பில் நடந்த மகளிர் தினவிழாவில் அமைச்சர் கீதாஜீவன் பெருமிதத்துடன் தெரிவித்தார். தூத்துக்குடியில் 1934ம் ஆண்டு முதல் இயங்கிவரும் பாரம்பரியமிக்க மகளிர் சமூக நல அமைப்பின் சார்பில் உலக மகளிர் தினவிழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைப்பின் புரவலரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தலைமைப் வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சொந்த காலில் நிற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்ணுரிமையை பாதுகாக்கும் இயக்கமாக திமுக செயல்பட்டு வருகிறது.

மகளிருக்கு ஏற்படும் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்தும், மற்றும் 181, 1098 ஆகிய அரசு உதவி எண்களை அழைத்தால் எந்நேரமும் அவர்களுக்கு உதவி செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த எண்களை அனைத்து பெண்களும் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார். இதைத்தொடர்ந்து மகளிர் சமூக நல அமைப்பின் சார்பில் பெண்களுக்கு தையல் பயிற்சி, இறகுபந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுவதை பார்வையிட்ட அமைச்சர் கீதாஜீவன் பாராட்டினார். இதையடுத்து மகளிர் முன்னேற்றம் குறித்து வக்கீல் சொர்ணலதா எடுத்துரைத்தார். விழாவில் மகளிர் சமூக நல அமைப்பின் தலைவர் பிரேமா, செயலாளர் மகேஸ்வரி, பொருளாளர் ராஜாத்தி, துணைத்தலைவர் அம்பிகா, துணைச் செயலாளர் தேன்மதி, விளையாட்டுத்துறைச் செயலாளர் ஷீலா, தையற்பள்ளி செயலாளர் கிருபா உள்ளிட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது