திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர் 287 பேர் ஆப்சென்ட்

திருச்சி, மே 6: திருச்சி மாவட்டத்தில் நேற்று 13 மையங்களில் நடந்த நீட் தேர்வை 8 ஆயிரத்து 283 மாணவ, மாணவிகள் எழுதினர். 287 பேர் தேர்வு எழுத வரவில்லை என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவம் ஆகிய இளங்கலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. இதில் திருச்சி மாவட்டத்தில் கண்டோன்மென்ட் கமலா நிகேதன் பள்ளி, காஜா நகர் சமது மேல்நிலைப் பள்ளி, பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரி, வயலூர் சாலை காவேரி சர்வதேச பள்ளி, ஏர்போர்ட் எஸ்பிஐஓஏ பள்ளி, பூலாங்குளத்துப்பட்டி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி, தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி, கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி, துடையூர் மகாலட்சுமி பொறியியல் கல்லூரி, மண்ணச்சநல்லூர் எஸ்ஆர்எம் டிஆர்பி பொறியியல் கல்லூரி, மணிகண்டம் இந்திராகணேசன் பொறியியல் கல்லூரி, துப்பாக்கித்தொழிற்சாலை கேந்திரிய வித்யாலயா, பெல் ஆர்.எஸ்.கிருஷ்ணன் மேல்நிலைப்பள்ளி ஆகிய 13 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. ஆனால் தேர்வுக்காக மாணவ, மாணவிகள் காலை முதலே தேர்வு நடைபெறும் இடத்துக்கு தங்களது பெற்றோர்களுடன் வந்திருந்து காத்திருந்தனர்.

தேர்வுக்கூடத்துக்குள் நுழைவுச்சீட்டில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி, காலை 11 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, கடும் சோதனைகளுக்கு பிறகே தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நீட் தேர்வெழுத 8 ஆயிரத்து 570 மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டிருந்த நிலையில் நடைபெற்ற தேர்வில் 8 ஆயிரத்து 283 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 287 பேர் தேர்வெழுத வரவில்லை. நீட்தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணிவரை நடைபெற்றது.

தேர்வு நடக்கும் மையங்களில் நடக்கும் சோதனைக்கு வசதியாக மாணவ, மாணவிகள் மதியம் 1.30 மணிக்குள்ளாக வரவேண்டும். மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து வருவோர் சோதனை செய்வதற்கு வசதியாக 12.30 மணிக்கே வந்துவிட வேண்டும். அணிகலன்கள் அணிந்து வரக்கூடாது, கால்களை மூடும் வகையிலான காலணிகள் அணிந்து வரக்கூடாது, கால்குலேட்டர், புளூடூத், இயர் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள் எடுத்து வரக்கூடாது என்பன உள்ளிட்ட கடும் விதிகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாலை 5.20 மணிக்கு நீட்தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்த மாணவ, மாணவிகளிடம் விசாரித்தபோது தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.

தொட்டியம்:
தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நீட் தேர்வை 1728 பேரில் ஆண்கள் 637 பேரும், 1091 பெண்களும் தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் 1664 பேர் நீட் தேர்வு எழுதினார்கள். ஆண்கள் 27 பேரும், பெண்கள் 37 பேரும் ஆக 64 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடிவுற்றது. தேர்வுக்கான அனைத்து பணிகளும் கொங்குநாடு பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் செய்தனர். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆவலுடன் காத்திருந்தனர். தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர், உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டது. தேர்வு எழுதும் மையத்தில் தேர்வுகள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் முறைகேடுகளை தடுக்க தேர்வு அறையில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப் பட்டனர்.

Related posts

ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ்

கல்லூரி வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது