திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 10ம் தேதி கடைசி நாள்

விருதுநகர், ஜூன் 9: மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய 10ம் தேதி கடைசிநாள் என, கலெக்டர் அறிவித்துள்ளார். விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள தகவல்: விருதுநகர் மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு ஊரக பகுதிக்கு 8 உறுப்பினர்கள், நகர்புற பகுதிக்கு 4 உறுப்பினர் பதவியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாதாரண தேர்தல் நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணைய அறிவுரைப்படி மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் மே 4ல் வெளியிடப்பட்டது.

மாவட்ட ஊராட்சி 20 வாக்காளர்களில் இருந்து 8 உறுப்பினர்களும், மாநகராட்சி 48, நகராட்சிகள் 169, பேரூராட்சிகள் 143 என 360 வாக்காளர்களில் இருந்து 4 உறுப்பினர்களும் ஆக 380 வாக்காளர்கள் மூலம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாள் ஜூன் 10, வேட்புமனு ஆய்வு ஜூன் 12, வேட்பு மனுக்கள் திரும்ப பெறுதல் ஜூன் 14, வாக்குப்பதிவு ஜூன் 23, வாக்குப்பதிவு முடிவுற்ற உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தல் முடிவுகள் ஜூன் 24ல் அறிவிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் முதல் கூட்டம் ஜூன் 28ல் நடைபெறும். தேர்தலில் போட்டியிட விரும்பும் மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் வேட்புமனுவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர்(தணிக்கை) அலுவலகத்தில் ஊரகப்பகுதிக்கும் மற்றும் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அலுவலகத்தில் நகரப்பகுதிக்கும் தாக்கல் செய்யலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கோவில்பட்டியில் 113வது நினைவுதினம் வாஞ்சிநாதன் படத்திற்கு மரியாதை

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நெடுஞ்சாலையில் வைத்துள்ள பேரிகார்டால் விபத்து அபாயம்

தூத்துக்குடி சண்முகபுரம் சவுண்ட் சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து