தாய்க்கு உருக்கமான கடிதம் எழுதிவிட்டு புதுப்பெண் தற்கொலை ஒடுகத்தூர் அருகே விபரீத முடிவு முதல் திருமணத்தை மறைத்த கணவன்

ஒடுகத்தூர், பிப்.24: ஒடுகத்தூர் அருகே கணவன் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த 7 மாதங்களில் தாய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் புதுமனை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி(50). இவரது மனைவி வளர்மதி(45). இவர்களது இளைய மகன் தமிழரசன்(27), லோடு வாகன டிரைவர். இவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், இதனை மறைத்து விட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அடுத்த திருக்கோவிலூரை சேர்ந்த மீனாட்சி(22) என்பவருடன் 2வதாக திருமணம் நடத்தியுள்ளனர். மேலும், இந்த திருமணத்தில் மீனாட்சிக்கு விருப்பம் இல்லையாம். ஆனால், திருமணத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பு மீனாட்சி தந்தை இறந்து விட்டதால், அவரது தாயார் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மீனாட்சிக்கும், அவரது கணவர் தமிழரசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. மீனாட்சி வேறொருவருடன் போனில் பேசி கொண்டிருப்பதாக தமிழரசன் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு தமிழரசன் வெளியூர் வேலைக்கு சென்ற நிலையில் மீனாட்சி மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அறையில் மீனாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தமிழரசன் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது, மீனாட்சி இறந்து கிடந்த அறையில் அவரது கைப்பட எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: அம்மா என்ன மன்னிச்சிடு, மாமா என்ன மன்னிச்சிடு. நான் சாக போறேன். இனிமே என்னால எந்த பிரச்னையும் வராது. என்னால நிம்மதியா இருக்க முடியல, அதனால செத்துப்போறன். அக்கா, பாப்பா, தம்பி எல்லோரும் பத்திரமா இருங்க. மாமா உங்க கிட்ட சொன்னேன். ஆனா நீங்க என் பேச்ச கேட்கல. எனக்கு இந்த கல்யாணம் வேனான்னு சொன்னேன். ஆனா நான் எல்லாம் ஒரு ஆளானு என் பேச்ச கேட்கல. சரி நான் உங்கள, இந்த உலகத்த விட்டு போறன். அதனால தமிழரசனை ஒன்னும் பண்ணாதீங்க. என்னால தான் நிம்மதியா வாழ முடியல, அவனாவது வாழட்டும், என்ன மன்னிச்சிடுங்க.

நான் உங்கள விட்டு தூரமா போகல, எங்க அப்பா பாக்கணும், நான் அப்பாவ பாக்கப்போறன். அம்மா என்ன நினைச்சி அழுகாதீங்க, என்ன மன்னிச்சிடு, மன்னிச்சிடு, மன்னிச்சிடு, இப்படிக்கு மீனாட்சி.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த மீனாட்சி திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடத்த உள்ளார். திருமணமான 7 மாதங்களில் இளம்பெண் எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்