தந்தையின் கையில் இருந்து தவறிய 4 மாத குழந்தையை கீழே போட்டு கொன்ற குரங்கு: மொட்டை மாடியில் நடந்த சோகம்

பரேலி: உத்தரபிரதேசத்தில் மூன்றாவது மாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து நான்கு மாத குழந்தையை குரங்கு ஒன்று கீழே போட்டு கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள துங்கா கிராமத்தை சேர்ந்த இந்திக் உபாத்யாய் மற்றும்  அவரது மனைவி ஆகியோர் தங்களது வீட்டின் மூன்றாவது மாடியின் மொட்டை மாடியில் நடந்து சென்று  கொண்டிருந்தனர். அப்போது இந்திக் உபாத்யாயின் கையில் தங்களது 4 மாத ஆண் குழந்தை நிஷிக் இருந்தது. திடீரென அவர்களது மொட்டை மாடிக்கு குரங்கு கூட்டம் வந்தது. அந்த தம்பதியினர் குரங்குகளை விரட்ட  முயன்றனர்; ஆனால் குரங்குகள் அங்கிருந்து செல்ல மறுத்து முரண்டு பிடித்தன. பின்னர் தம்பதியினர் தங்களது குழந்தையுடன் படிக்கட்டுகளில்  இருந்து கீழே ஓட முயன்றனர். அப்போது இந்திக் உபாத்யாயின் கையிலிருந்து குழந்தை தவறி  விழுந்தது. அவர் தனது குழந்தை நிஷிக்கை கீழே குனிந்து எடுப்பதற்குள், அங்கிருந்த குரங்கு ஒன்று திடீரென வந்து குழந்தையை ‘லபக்’ என்று எடுத்து  சென்றது. பின்னர் அந்த குழந்தையை அங்கும் இங்குமாக தூக்கிச் சென்று கீழே போட்டது. பெற்றோர் முன்னிலையில் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து தலைமை வன பாதுகாவலர் லலித் வர்மா கூறுகையில், ‘4 மாத குழந்தையை குரங்கு தூக்கிச் சென்று கொன்றது குறித்து விசாரித்து வருகிறோம். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, அட்டகாசம் செய்யும் குரங்குகளை அடையாளங் கண்டு பிடித்து வரவுள்ளனர்’ என்று கூறினார்….

Related posts

மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்

நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்த 11 பேரின் வீடுகள் இடிப்பு