ஜாக்டோ ஜியோ சார்பில் பிப்.15ல் வேலை நிறுத்தம்: போராட்ட ஆயத்த மாநாட்டில் தீர்மானம்

 

சிவகங்கை, பிப். 11: சிவகங்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில், போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், மகேஸ்வரன், சகாயதைனேஷ், நாகராஜன் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் சிறப்புரையாற்றினார். மாவட்ட உயர்மட்டக்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 1.4.2003க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தொடக்கக்கல்வி துறையில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாடு, ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள்,

கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.15 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்றும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில் பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்