சேந்தமங்கலம் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ₹1000 வீழ்ச்சி

சேந்தமங்கலம், மார்ச் 29:சேந்தமங்கலம் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ₹1000 குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேந்தமங்கலம் ஒன்றியம் கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி, சிங்களாந்தபுரம், பேளுக்குறிச்சி, புதுச்சத்திரம் ஒன்றியம் திருமலைப்பட்டி, குளத்துப்பாளையம். எஸ்.உடுப்பம், மின்னாம்பள்ளி, கொல்லிமலை ஒன்றியம் வாழவந்தி நாடு, அரியூர் நாடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மரவள்ளி சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் மரவள்ளி கிழங்குகளை, வியாபாரிகள் வாங்கி செல்லப்பம்பட்டி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சேகோ பேட்டரிகளுக்கு, ஜவ்வரிசி தயாரிக்க அனுப்பி வைக்கின்றனர்.மேலும் சில வியாபாரிகள் மரவள்ளிக்கிழங்கை சிப்ஸ் மற்றும் ஸ்டார்ச் மாவு தயாரிக்க அனுப்பி வைக்கின்றனர்.

சேகோ ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவு சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில், விலை நிர்ணயம் செய்கின்றனர். இந்நிலையில் ஜவ்வரிசி தயாரிக்க செல்லும் மரவள்ளி கிழங்கு டன், கடந்த வாரம் ₹11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது டன்னுக்கு ஆயிரம் விலை குறைந்து ₹10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ₹12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஆயிரம் விலை குறைந்து ₹11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மரவள்ளி கிழங்கு அறுவடை குறைந்து வருவதால், விலை சரிய தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை குறைந்து வருவதால் மரவள்ளி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்