செயின் பறிப்பு வழக்கில் வாலிபர் சிக்கினார்: மற்றொருவருக்கு வலை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறித்த வழக்கில் வாலிபர் சிக்கினார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் விக்னேஸ்வரர் நகரை சேர்ந்தவர் பத்மநாபன்.  இவர், திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பூமலர் (45). இவர், கடந்த 13ம் தேதி மாலை தனது வீட்டுக்கு அருகேயுள்ள பைபாஸ் சாலையிலுள்ள கடைக்கு சென்று பால் பாக்கெட் வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, இவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவன் பூமலர் கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.விஜயகுமார் உத்தரவின்பேரில், மாமல்லபுரம் டிஎஸ்பி குணசேகரன், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.  இந்நிலையில், நேற்று திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பை-பாஸ் அருகே தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் வேகமாக வந்த ஒரு பைக்கை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரை பார்த்ததும் பைக்கில் வந்த இருவரில் ஒருவன் தப்பியோடி விட்டான். மேலும், தப்பியோட முயன்ற மற்றொருவனை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை செய்தனர். அதில், கடந்த 13ம் தேதி பூமலர் என்ற பெண்ணிடம் செயின் பறித்து சென்றதை ஒப்பு கொண்டான். விசாரணையில், செங்கல்பட்டு அடுத்த பரனூரை சேர்ந்த ராஜேஷ் என்கிற ராஜி (29) என்பது தெரியவந்தது. அவனிடமிருந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்….

Related posts

கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்

தெலங்கானாவில் பரபரப்பு ஒரு ரூபாய் தகராறில் வாலிபர் கொலை: நண்பர் கைது

பூனைக்குட்டி காணாமல் போனதால் தாத்தாவை சரமாரியாக வெட்டிய பேரன்: கேரளாவில் பயங்கரம்