செட்டிநாடு சிபிஎஸ்இ பள்ளியில் வாலிபால் அணிக்கு வீரர்கள் தேர்வு

காரைக்குடி, ஆக. 7: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் சிவகங்கை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட அணி தேர்வு நடந்தது. பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிலம்பரசன் வரவேற்றார். மாவட்ட வாலிபால் சங்க தலைவர் வரதராஜன், செயலாளர் ஜெயக்குமார், துணைத்தலைவர் ஜான்கென்னடி முன்னிலை வகித்தனர். பள்ளி குழும துணைத்தலைவர் அருண் தலைமை வகித்தார். பள்ளிகுழும தலைவர் எஸ்பி.குமரேசன் போட்டிகளை துவக்கிவைத்து, தேசிய, மாநில வீரர்களை கவுரவித்து பேசுகையில், கல்வியும், விளையாட்டும் மாணவர்களுக்கு இரு கண்களாக இருக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர் வாலிபால் டீம் டெவலப்மென்டை எங்கள் பள்ளிக்கு வழங்கியுள்ளார். பொதுவாக மாணவர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தற்போது விளையாட்டில் சாதிக்க இருக்கும் மாணவர்களை சந்திக்க வாய்பு கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. பள்ளி என்பது கல்வி கற்பிக்க மட்டும் அல்ல. அதனுடன் சேர்ந்து விளையாட்டையும் கற்றுக்கொடுக்க வேண்டும். விளையாட்டின் மூலம் உடல்நலன், மனநலன் பாதுகாக்கப்படும். மாணவர்கள் ரெகுலராக விளையாட வேண்டும்.

மாணவர்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த எப்போதும் தயங்கக்கூடாது. உங்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர நாங்கள் உள்ளோம். இங்குள்ள வாலிபால் அணி மாநில போட்டியில் தேர்வாகி மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை பெற்றால் சிறப்பு பரிசு வழங்கப்படும். உங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இது ஒரு வாய்ப்பு என்றார். தேர்வு போட்டியில் 57 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் இருந்து மாவட்ட அணி தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் சேலத்தில் நடக்கவுள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். தேர்வாளர்கள் ராஜன், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது